வசதியான வாழ்க்கைக்கு காதலை துறந்த காதலி ! குறுக்கு வழியில் சொகுசு வாழ்க்கையை தேடிய காதலன் ! “டிராகன்” படத்தின் விமர்சனம்

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், இவானா, மிஷ்கின், கேஎஸ் ரவிக்குமார், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், இந்துமதி, தேனப்பன் உள்ளிட்டோர் நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “டிராகன்”.
கதைப்படி.. பன்னிரண்டாம் வகுப்பில் 96 சதவீதம் மதிப்பெண் பெற்று, வேலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்கிறான் ராகவன் ( பிரதீப் ரங்கநாதன் ). கல்லூரியில் டிராகன் என்கிற பெயரில் வகுப்பிற்கு செல்லாமல் அடாவடித்தனம் செய்து கெத்தாக சுத்தி வருகிறான். படிக்காமல் ரவுடித்தனம் செய்து அனைவரையும் மிரட்டி திரியும் ராகவனை காதலிக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். ஜாலியாக வருடங்கள் நகர, கல்லூரி வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இறுதியில் ராகவனுக்கு 48 அரியர் விழுகிறது.

பின்னர் இரண்டு ஆண்டுகள் வேலைக்கு செல்வதாக, பெற்றோரை ஏமாற்றி நண்பர்கள் அறையில் கூத்தடித்துக் கொண்டு சுற்றுகிறார். ஒருநாள் வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக ராகவனிடம் காதலி கூற, இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிகின்றனர். அவர் வேறொருவரை திருமணம் செய்து கொள்கிறார். காதலியை பழிவாங்கும் நோக்கத்தில் அவரது கணவரை விட நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என நினைத்து, குறுக்கு வழியில் சான்றிதழ் தயார் செய்து பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான் ராகவன். பின்னர் பெரிய தொழிலதிபரின் மகளுக்கும் ராகவனுக்கும் திருமணம் செய்ய பேசி முடிவு செய்யப்படுகிறது.

ஒருநாள் எதார்த்தமாக ராகவனை பார்த்த கல்லூரியின் முதல்வர் மிஷ்கின் அவனை பின்தொடர்ந்து, அவனது நிறுவனத்தில் சந்திக்கிறார். அப்போது ராகவன் தனது போர்ஜரி வேலை நிறுவனத்திற்கு தெரிந்தால் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் என கெஞ்சுகிறார். அப்படியானால் நீ மீண்டும் கல்லூரிக்கு வந்து மூன்று மாதங்கள் வகுப்பை கவனித்து தேர்வு எழுதி 48 அரியரையும் தேர்ச்சி பெற்றால், நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்றார். இது நடக்கிற காரியமா என கெஞ்சுகிறான் ராகவன்.

ராகவன் மீண்டும் கல்லூரிக்கு சென்று மூன்று மாதங்கள் படித்து தேர்வு எழுதி 48 அரியரையும் முடித்தானா ? தொழிலதிபரின் மகளுக்கும் ராகவனுக்கும் திருமணம் நடந்ததா ? இல்லையா என்பது மீதிக்கதை..
வாழ்க்கையில் பெற்றோரை ஏமாற்றி குறுக்குவழிகளில் பணம் சம்பாதித்து ஆடம்பரமான வாழ்வை தேடி அலையும் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு பாடம் எடுக்கும் வகையில், திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர்.

நாயகனாக பிரதீப் ரங்கநாதன் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இளைய சமுதாயத்தினரின் வரவேற்பை பெற்றுள்ளார். அவரது தாய், தந்தையாக நடித்துள்ள இருவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் மிஷ்கின் டிராகன் மூலம் நடிகராக தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் கேஎஸ் ரவிக்குமார் கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.