அரசியல்

‘அதிமுக-வில் உட்கட்சிப் பூசலா..?’- மைத்ரேயன் எம்.பி., குமுறல்

அதிமுக சார்பில் மாநிலங்களை எம்.பி.,-யாக இருப்பவர் மைத்ரேயன். ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் என்று இரு முகாம்களாக அதிமுக பிரிந்தபோது, மைத்ரேயன் பன்னீர்செல்வத்துக்குப் பக்க பலமாக இருந்தார். அப்போது டெல்லிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் உறவுப் பாலமாக செயல்பட்டு வந்தது மைத்ரேயன்தான். இரு முகாம்களும் இணைந்த பின்னர் அவருக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது.

இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக சார்பில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த 3 குழுக்களிலும் மைத்ரேயன் எம்.பி-யின் பெயர் இடம் பெறவில்லை. இதையடுத்து, தனது முகநூல் பக்கத்தில் குமுறியுள்ளார் மைத்ரேயன்.

அவரது பதிவு வருமாறு, “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 2019 விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள கழகம் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு என்று மூன்று குழுக்களை கடந்த 23/01/2019 அன்று அறிவித்துள்ளது. மூன்று குழுக்களிலும் நான் இடம் பெறவில்லை. ஒருவரை குழுவில் சேர்ப்பதும், சேர்க்காதிருப்பதும் கட்சித் தலைமையின் விருப்பம், உரிமை.

கழகத்தில் நான் 1999-ல் இணைந்த பிறகு நடைபெற்ற 2001, 2006, 2011 சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் மற்றும் 2004, 2009, 2014 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்கள் அனைத்திலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிலும் 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிலும் ஜெயலலிதா என்னை சேர்த்து இருந்தார்.

2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது நடைபெற்ற சுவையான சம்பவத்தினை இந்தப் பதிவில் எழுத விரும்புகிறேன். 2009-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையே வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டு இருந்தது. மாநில, தேசியப் பிரச்னைகளை ஒரு தேசியக் கண்ணோட்டத்தோடு அணுகி “வளமான இந்தியாவிற்கான செயல் திட்டம் –  An Agenda For A Better India “ என்ற தலைப்பில் அந்தத் தேர்தல் அறிக்கை தயாரானது.

அம்மா அவர்கள் 2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிக்கையை போயஸ் தோட்டத்தில் வெளியிட்டார். அத்தோடு வித்தியாசமான கோணத்தில் இந்த தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று ஜெயலலிதா திட்டமிட்டார். அனைத்து பத்திரிகை நிருபர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கான சந்திப்பு தி.நகர் பாண்டிபஜார் அருகே ரெசிடென்சி டவர்ஸ் ஓட்டலில் அன்றைய கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

தேர்தல் அறிக்கையின் விவரங்களை ஸ்லைடுகள் மூலம்  Power point presentation  ஆக விளக்க வேண்டும். ஜெயா டிவி-யின் செய்தி ஆசிரியர் சுனில் செய்யலாம் என்று ஜெயலலிதாவிடம் கூறியபோது, “இதை மைத்ரேயன் செய்யட்டும், அதுதான் சரியாக இருக்கும்“ என்று ஜெயலலிதா உத்தரவிட்டார். நிகழ்ச்சிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு எனக்கு தெரிவிக்கப்பட்டது. நானும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை விளக்கி எடுத்துரைத்தேன். நான் அறிந்த வரை ஒரு அரசியல் கட்சி தனது தேர்தல் அறிக்கையை ஸ்லைடுகள் மூலம் Power point presentation செய்தது அதுதான் முதல்தடவை.

அடுத்த நாள் காலை ஜெயலலிதா கொடநாடு புறப்பட்டுச் சென்றார். பழைய விமான நிலையத்தில் கழகத்தின் தலைவர்கள் நின்று ஜெயலலிதாவுக்கு வணக்கம் தெரிவித்தார்கள். நானும் தான். புன்னகையோடு அவரும் ஏற்றுக்கொண்ட பிறகு ஜெயலலிதாவின் கார் விமான நிலைய நுழைவுவாயில் நோக்கி செல்கிறது. இரண்டு அடி நகர்ந்ததும் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கி என்னை கூப்பிட்டார்.

“மைத்ரேயன், நேற்று நீங்கள் சிறப்பாக செய்தீர்கள் என்று சொன்னார்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தி விட்டு விமானம் நோக்கி சென்றார்கள். இதைவிட எனக்கு வேறென்ன பாராட்டுப் பத்திரம் வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து ஓபிஎஸ்-ஸுக்கு நெருக்கமான நிர்வாகிகள் ஓரங்கட்டுப்பட்டு வருவது, அதிமுக-வில் உட்கட்சிப் பூசல் புகைந்து வருவதையே காட்டுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button