அரசியல்

கூட்டணி என்பது வேறு, கொள்கை வேறு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்திய அளவில் அ.தி.மு.க மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம், வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெறுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, சேலம் மாவட்டத்தில் மட்டும் 18,000 சுய உதவி குழுக்களுக்கு, 500 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 41,000 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம்.
எங்களது கூட்டணி மெகா கூட்டணி, ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறி, மாறி வருகிறது. கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. எங்களது வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள். பா.ஜ.க, பா.ம.க. உடன் பேச்சுவார்த்தை முடிந்து, மேலும் பல்வேறு கட்சிகளுடன் பேசி வருகிறோம்.
கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பா.ம.கவுக்கு 7 இடங்களும், பாஜவுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தெரியும். மத்தியில் வலுவான கூட்டணி அமைந்தால் தான் வளர்ச்சிப் பணிகள் செய்து தரமுடியும்.
இந்திய அளவில் அ.தி.மு.க மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. இந்தத் தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம்.
இந்நிலையில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அக்சய பாத்ரா தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் முதல்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆயிரம் சிறார்களுக்கு உணவு வழங்கும் வகையில், இந்த திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணி என்பது மதவாத, சாதிய கூட்டணி என மு.க.ஸ்டாலின் விமர்சித்திருப்பதாக செய்தியாளர்கள் கேட்டபோது, தங்கள் கொள்கைகள் வேறு, பாஜகவின் கொள்கைகள் வேறு என ஜெயக்குமார் பதிலளித்தார்.
அதிமுக கூட்டணி மக்களை நம்பிய கூட்டணி அல்ல, காசு பணத்தை நம்பிய கூட்டணி என கமல் கூறியிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டபோது, பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கியதை காசு பணம் என குறிப்பிடுகிறாரோ என்று ஜெயக்குமார் பதிலளித்தார்.
தங்கள் பலம் தங்களுக்கு தெரியும் என்றும், உரிய மரியாதை கொடுக்கும் இடத்திற்கே தேமுதிக செல்லும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், தேமுதிகவுக்கு அதிமுக உரிய மரியாதை தரவில்லையா என வினவினர். கூட்டணி கதவு திறந்திருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் பேச வரலாம் என்றும், பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஜெயக்குமார் பதிலளித்தார். கூட்டணிக்கு வந்தால் “ஹேப்பி” என்றும், கூட்டணிக்கு வராவிட்டால் “டோன்ட் ஒர்ரி” என்றும் ஜெயக்குமார் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button