டிரெண்டான #RejectZomato: மன்னிப்பு கேட்ட சொமேட்டோ நிறுவனம்…
மதுரையைச் சேர்ந்த விகாஸ் என்பவர் சொமோட்டோவில் உணவு ஆர்டர் கொடுத்திருந்தார். அவர் கொடுத்த ஆர்டரில் ஒரு உணவுப்பொருள் டெலிவரி ஆகாததால் இது குறித்து சொமோட்டோ வாடிக்கையாளர் சேவையை சாட் வழியாக தொடர்பு கொண்டிருக்கிறார் அவர். அப்போது தனக்கு ஒரு உணவு டெலிவரி கிடைக்கவில்லை, அதற்குரிய பணத்தை திருப்பித்தர வேண்டும் என கேட்டிருக்கிறார். அவரிடம் சாட் செய்த வாடிக்கையாளர் சேவை பிரிவு அதிகாரி, உங்கள் வட்டார மொழி தடையாக இருக்கிறது.. இந்தி தேசிய மொழி, எனவே ஓரளவு புரிந்து கொள்ளுகின்ற அளவிற்காவது அனைவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுரை செய்தார்.
இதனைக் கண்டு திகைத்த மதுரையைச் சேர்ந்த விகாஸ், இந்த உரையாடல் தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டுகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த ட்வீட் விரைவாகவே வைரல் ஆனது. மேலும் பல்வேறு தரப்பினரும் சொமோட்டோவின் பொறுப்பற்ற பதிலை கண்டித்து #RejectZomato என்ற ஹேஷ்டேகில் பதிவிட, இது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.
இதன் விளைவாக தேசிய பங்குச் சந்தையில் சொமேட்டோ நிறுவன பங்குகள் 3%க்கு மேல் சரிந்தன. வர்த்தக நாளின் தொடக்கத்தில் 144.80 ரூபாய் என்றிருந்த சொமேட்டோவின் பங்குகள் வர்த்தக நாளின் முடிவில் 4.45 ரூபாய் குறைந்து பங்கின் விலை 139.60 ரூபாயாக குறைந்திருக்கிறது. இதன் மூலம் 3.09% அளவுக்கு சொமேட்டோவின் பங்கு சரிந்திருக்கிறது.
இந்தி தேசிய மொழி, எனவே ஓரளவு புரிந்து கொள்ளுகின்ற அளவிற்காவது அனைவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என சொமேட்டோ நிறுவன ஊழியர் அறிவுறுத்திய விவகாரத்தில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த வாடிக்கையாளர் விகாஷ் எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது என பேட்டியளித்துள்ளார்.
“இந்தியை தேசிய மொழி என சொமேட்டோ தரப்பில் கூறினர். ஆனால் அவர்களிடம் இந்தி தேசிய மொழி கிடையாது. தமிழ் போன்ற பிற பிராந்திய மொழிகளையும் நீங்கள் (சொமேட்டோ) மதிக்க வேண்டும் என்று விளக்கம் தர வேண்டும் என்று சொமேட்டோவிடம் கேட்டிருக்கிறேன். அவர்கள் இதுவரை விளக்கம் தரவில்லை.
இது சொமேட்டோவிடம் மட்டுமே இருக்கும் பிரச்னை அல்ல, தொலைத்தொடர்பு, வங்கி என எந்த துறையாக இருந்தாலும் நமக்கு இந்த பிரச்னை ஏற்படுகிறது. நாம் படித்திருக்கிறோம், நமக்கு ஆங்கிலம் என்ற வேறு ஒரு கூடுதல் மொழி தெரிகிறது என்பதால் நமக்கு பிரச்னை கிடையாது, ஆனால் இதுவே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வாடிக்கையாளர் குறைதீர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுகையில் மாற்று மொழி தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். இது என் வீட்டிலும் நடந்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது.
மாநிலத்தில் தொழில் செய்கின்ற போது, மாநில மொழியில் வாடிக்கையாளர் சேவை அதிகாரி உரையாடி பிரச்னையை தீர்க்கும் வகையில் முதலமைச்சர் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுவே தமிழக அரசுக்கு என்னுடைய கோரிக்கை என்று விகாஷ் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து சொமோட்டோ மன்னிப்பு கோரியிருக்கிறது. அந்நிறுவனம் தமிழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம்தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிரான கருத்தை பகிரக்கூடாது என தொடர்ந்து எங்கள் முகவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.
கோவையில் விரைவில் ஒரு உள்ளூர் கால்செண்டர் அல்லது சர்வீஸ் செண்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முத்துபாபு