தமிழகம்

நைஜீரிய கும்பலுடன் தொடர்பு… போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் டிஜிபி மகன் கைது!

போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை சென்னைப் போலீஸார் எடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் கொக்கைன் போதைப்பொருளை விற்ற குற்றச்சாட்டில் அருண் (40), மெகலன் (42), நைஜிரியா நாட்டைச் சேர்ந்த ஜான் எஸி, ஆகியோரை தனிப்படை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3.8 கிராம் கொக்கைன், பணம் ரூ.1,02,000, இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போதைப்பொருள் தொடர்பாக புனித தோமையர்மலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், “போதைப்பொருள் நெட்வொர்க் குறித்து கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நந்தம்பாக்கம் பகுதியில் கொக்கைன் என்ற போதைப்பொருள் விற்கப்படுவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனால் அங்குச் சென்று மூன்று பேரை சுற்றி வளைத்துப்பிடித்தோம். இதில் அருண் என்பவரிடம் விசாரித்த போது அவர் முன்னாள் டி.ஜி.பி ஒருவரின் மகன் எனத் தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். அப்போது யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என எங்களின் உயரதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் இந்த வழக்கிலிருந்து அருணை விடுவிக்க காவல்துறை உயரதிகாரிகள் சிலரிடமிருந்து பிரஷர் வந்தது. ஆனால் எங்களின் உயரதிகாரிகள் அருணை விடுவிக்காமல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதையடுத்து அருண் உள்பட மூன்று பேரை கைது செய்திருக்கிறோம். இந்த போதைப்பொருள் விற்பனைக் கும்பலின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைதாகியிருக்கும் முன்னாள் டி.ஜி.பி-யின் மகனுக்கு நைஜிரியா நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்து வந்திருக்கிறது. முதலில் இந்தக் கும்பலைக் கைது செய்யும்போது அருண் குறித்த தகவல்கள் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட முன்னாள் டி.ஜி.பியும் காவல்துறையில் பணியாற்றிய காலக்கட்டத்தில் சர்ச்சைகளில் சிக்கியதோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்” என்றார்.

போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும், அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

இந்தச் சூழலில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் ரகசிய தகவல் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து அந்தப் பிரிவின் போலீஸார் கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தனர். அப்போது அந்த வீட்டில் போதைப்பொருள் விற்கும் கும்பல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸார் அங்கிருந்த ஏழு பேரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் 250 கிராம் எடையுள்ள போதைப்பொருள், ஆறு செல்போன்கள், எடைபோடும் சிறிய மெஷின், கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பிடிபட்டவர்களில் 5 பேர் கல்லூரி மாணவர்கள் எனத் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு அவர்களை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து கொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், “கைதுசெய்யப்பட்ட மாணவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள். அதனால் போதைப்பொருளை விலைக்கு வாங்கி வந்த இவர்கள், ஒன்று சேர்ந்து வீட்டிலேயே அதை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக அந்த வகை போதைப்பொருளை எப்படி தயாரிப்பது என இணையதளத்தில் தகவல்களை சேகரித்திருக்கிறார்கள். பின்னர் அதற்குரிய மூலப் பொருள்களை பாரிமுனையில் உள்ள கடைகளில் ஆய்வக ஆராய்ச்சிக்கு வேண்டும் எனக் கூறி வாங்கியிருக்கிறார்கள்.

இதையடுத்து வீட்டிலேயே போதைப்பொருளை தயாரித்துள்ளனர். வீட்டில் உள்ளவர்களும் மாணவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள் எனக் கருதி அவர்களைக் கண்டுக்கொள்ளவில்லை. வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட போதைப்பொருளை இந்தக் கும்பல் விற்க முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அதற்குள் எங்களிடம் சிக்கிக் கொண்டனர். கைதானவர்கள் அளித்த தகவலின்படி இந்தக் குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைத் தேடிவருகிறோம்“ என்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button