தாய்ப்பால் தானம்… : மென் பொறியாளரின் மேன்மையான முயற்சி….
புதுச்சேரி ஜிப்மர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை தனியாக இயங்கி வருகிறது. இங்கு மாதத்திற்கு 1500 குழந்தைகள் பிறக்கின்றன. இதில் எடை குறைவாகவும் குறைந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது.
இந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்காத சூழ்நிலையில் தாய்ப்பால் வங்கி மூலம் தாய்ப்பால் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2016ம் ஆண்டு ஜிப்மரில் அமுதம் தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் 4000 முறை தாய்ப்பால் தானம் இங்கு செய்யப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளொன்றுக்கு சராசரியாக 1 முதல் ஒன்றரை லிட்டர் அளவுக்கு தாய்ப்பால் தானமாக இங்கே கிடைக்கிறது. இதன் மூலம் மாதத்திற்கு 100 குழந்தைகளாவது பயன்பெறுவதாக மருத்துவர் சிந்து தெரிவிக்கிறார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கட்டாயம் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நோயால் தாய் பாதிக்கப்பட்டாலும் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று வராது. தாய்ப்பால் மூலம் கொரோனா நோய் பரவாது. கிருமியை எதிர்க்கும் சக்தி தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கிடைக்கும். கொரோனா பாதிப்பு தாய்க்கு இருந்தாலும் தாயையும் சேயையும் பிரிக்க வேண்டிய அவசியமில்லை. பால் கொடுப்பதற்கு முன்பு கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துவிட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்மார்கள் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். மற்றபடி வழக்கம் போல் தாய்ப்பால் தரலாம் என பச்சிளங் குழந்தைகள் நல மருத்துவர் ஆதிசிவம் கூறியுள்ளார்.
அமுதம் தாய்ப்பால் வங்கிகள் மூலம் தாயை இழந்த குழந்தைகளும் தாயிடமிருந்து தற்காலிக பால் கிடைக்காத குழந்தைகளும் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது குழந்தையைப் போலவே ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்று, அவினாசியைச் சேர்ந்த பெண் மென்பொறியாளர் ஒருவர் எடுத்த தாய்ப்பால் சேகரிப்பு முயற்சி, ஏழைக் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் கிடைக்க வழிவகை செய்துள்ளது.
நலிவுற்ற குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது அசாத்திய செயலால் வியந்து பார்க்க வைத்து தாய்மையின் அடையாளமாக திகழ்கிறார், திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த மென்பொறியாளர் ரூபா.
கோவை டைடல் பார்க்கில் பணிபுரிந்து வரும் ரூபாவுக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பச்சிளங் குழந்தைகளுக்கு நேரடியாக தாய்ப்பால் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் பல குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தேவை என்பதை உணர்ந்துள்ளார் ரூபா.
தாயின் கருவில் பொதுவாக ஒரு குழந்தை 39 வாரங்கள் கடந்தால்தான் முழு வளர்ச்சி அடைந்திருக்கும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் ஏழைத் தாய்மார்களுக்கு 28 மற்றும் 29 வது வாரங்களிலேயே பிறக்கும் சில குழந்தைகள் சத்துக் குறைபாட்டோடு நலிவுற்றுக் காணப்படுகின்றன.
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் இக்குழந்தைகள் மட்டுமின்றி, தாயால் கைவிடப்பட்ட குழந்தைகள், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் ஆகியவற்றுக்கும் நோய் எதிர்ப்புத் திறன் மிக்க தாய்ப்பால் கிடைக்கும் வகையில், வாட்ஸ் ஆப் வாயிலாக அமிர்தம் தாய்ப்பால் கொடையாளர்கள் குழுவை தொடங்கியுள்ளார் ரூபா.
முதலில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசி தாய்ப்பால் தானம் பெற்றதாகவும், அந்த கொடையாளர்கள் வட்டத்தை சமூக வலைத்தளங்களின் மூலம் விரிவுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இவரது ‘அமிர்தம் பிரஸ்ட்மில்க் டொனேசன்’ என்ற அமைப்பில் தற்போது 1050 தாய்மார்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் குழந்தையின் தேவைக்குப் போக கிடைக்கும் பாலை பாத்திரத்தில் எடுத்து, ப்ரீசர் பேக்குகளில் அடைத்து மைனஸ் 4 டிகிரியில் பீரிசரில் வைத்து சேமிக்கின்றனர்.
தாய்மார்கள் பாதுகாத்து வைத்துள்ள தாய்ப்பாலை மாதம் ஒருமுறை சேகரிக்கும் ரூபா, கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார். அங்கு இருக்கும் சோதனைக் கூடத்தில் பல நிலைகளில் தாய்ப்பால் தரம் பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படுகிறது. ஓராண்டு வரை இந்த தாய்ப்பால் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக அவர் கூறுகிறார்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க கொடுக்கத் தான் அதிகளவில் சுரக்கும் என்ற உண்மையை தாய்மார்களுக்கு எடுத்து கூறியதன் பயனாலேயே முழுமையாக சேகரிக்க முடிந்ததாகத் தெரிவித்தார் ரூபா.
அரசு மருத்துவமனைக்கு இதுவரை 800 லிட்டர் அளவுக்கு தாய்ப்பாலை கொண்டு சேர்த்துள்ள ரூபா, இச்சேவையை தடையில்லாமல் தொடர உரிய உபகரணங்களை அரசு வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பசியால் ஏங்கித் தவிக்கும் எண்ணற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கும், தாயுள்ளம் கொண்ட மேன்மையான பொறியாளர் ரூபா பாராட்டுக்குரியவர்.
- வெற்றிவேல்