தமிழகம்

ஒமைக்ரான் வைரஸ் : 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடு

உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸான ஒமைக்ரான், தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க, 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், சீனா, மொரிசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள், கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இருந்தாலும், தமிழகம் வந்திறங்கிய பிறகு இவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும். இதில், தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டாலும் கூட ஏழு நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எட்டாம் நாள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் நெகடிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே வெளியே செல்லலாம். ஒருவேளை கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானால், பயணியின், மாதிரி சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அப்போது அவர்கள் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். மரபணு பரிசோதனையில் ஒமைக்ரான் இல்லை என உறுதி செய்யப்பட்டால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.

இதற்காக சென்னை, கோவை, மதுரை, திருச்சி என நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும், ஒரு சுகாதார திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அரசு பட்டியலிட்ட 12 நாடுகளை தவிர பிற நாடுகளில் இருந்து வருபவர்களும் கொரோனா நெகடிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களில் 5 சதவீதம் பேருக்கு மட்டும் விமானநிலையத்தில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் கொரோனா உறுதி செய்யப்பட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் வரும் பயணிகளுக்கு கோவை விமானநிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பயணிகளிடம் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரிகள் உடனுக்குடன் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு வருவதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த வகை பாதிப்புகளை 3 மணி நேரத்திலேயே கண்டறியக் கூடிய, தக்பாத் எனப்படும் டெஸ்ட் கிட் மூலமான பரிசோதனையை, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒமைக்ரான் பரவலை தடுக்கும் நோக்கில், சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ள, சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில், மொத்தம் 12 அரசு ஆய்வகங்களில் இந்த வகை பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் மரபணுவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா, குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவிலான மக்களுக்கு தொற்று உள்ளதா எனவும் கண்காணிக்கப்பட உள்ளது.

புதிதாக பரவத் தொடங்கியுள்ள ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றை, மரபணு பகுப்பாய்வு முறையில் கண்டறிய வழக்கமாக 7 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜிகினிறிகிஜிபி எனப்படும் எனப்படும் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனையை மேற்கொண்டால், 3 மணி நேரத்திலேயே மரபணுவில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும். அதன் அடிப்படையில், உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்தி, விரைந்து உரிய சிகிச்சைகைகளை மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ் நாட்டில் ஒரு லட்சத்து 252 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 26 ஆயிரத்து 197 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்ததால், மரணம் அடைந்தோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது.

24 மணி நேரத்தில் நோய் தொற்றில் இருந்து 767 பேர் மீண்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 26 லட்சத்து 81 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எட்டாயிரத்து 291 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக கோவையில் 106 பேருக்கும், சென்னையில் 105 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஈரோட்டில் 70 பேரும், திருப்பூரில் 62 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 51 பேருக்கும், சேலத்தில் 49 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? – ராதாகிருஷ்ணன் விளக்கம்

வெளிநாடுகளில் ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் இல்லை என்றும், எனினும் பொதுமக்கள் கவன குறைவாக இருக்கக்கூடாது எனவும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தகுதியுடையவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

உதுமான்அலி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button