கிரிமினல் குற்ற வழக்குகளில் சிக்கியவருக்கு, திமுக இளைஞரணியில் மாவட்டப் பொறுப்பு !
தமிழ்நாட்டில் கடந்த இரண்டாண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின், தனது நிர்வாகத் திறமையால் கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி, நாடே திரும்பிப் பார்க்கும் முதலமைச்சராக இருந்து வருகிறார்.
திமுகவின் முக்கிய அமைப்பாக திகழும் இளைஞரணிக்கு அடித்தளம் அமைத்தவர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் தான். இன்று இளைஞரணி மாநிலச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். தற்போது இளைஞரணி பொறுப்பில் இருந்தவர்கள் திமுக ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு சென்றுவிட்டதால், காலியாக உள்ள பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மதுரை தெற்கு திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்துவந்த மதன் குமார் கள்ளிக்குடி திமுக ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட துணை அமைப்பாளர்களாக விமல், சுரேஷ், வினோத் உள்ளிட்ட நான்குபேர் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் உசிலம்பட்டி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக இருந்துவந்த ஜெகநாதன் என்பவருக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதவி வழங்க இருப்பதாகவும், அவருக்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் பரிந்துரை செய்ததாகவும் தகவல்கள் அப்பகுதியில் பரவியதால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெகநாதன் பட்டாக்கத்தி வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது, கொடைக்கானலுக்கு ஆள் கடத்திச் சென்று மிரட்டியது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் இவர்மீது உசிலம்பட்டி தாலுகா, நகர் காவல் நிலையங்களில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களுக்கு ஆளும் திமுகவில் மாவட்டப் பொறுப்புகள் கொடுத்தால் கட்சிக்கும் ஆட்சிக்கும் தான் கெட்ட பெயர் ஏற்படும்.
திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் பாரதீய ஜனதா கட்சியில் பெரும்பாலான பொறுப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது என விமர்சித்து வரும் நிலையில், திமுக இளைஞரணியில் கிரிமினல் குற்றவழக்குகள் உள்ள ஜெகநாதனுக்கு பொறுப்புகள் வழங்கலாமா ? என கேள்விகள் எழுப்பியதோடு, தலைமைக்கும் புகார்கள் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே டாஸ்மாக், கள்ளச்சாராயம் உள்ளிட்ட விவகாரத்தில் ஆளும் திமுக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நபருக்கு, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பதவி வழங்காமல், கட்சிக்காக உழைத்த வேறு யாருக்காவது வழங்க மாவட்டச் செயலாளர் பரிந்துரை செய்யலாம் என்றனர்.
இது சம்பந்தமாக மதுரை தெற்கு திமுக மாவட்ட செயலாளர் மணிமாறனிடம் கேட்டபோது… நான் ஜெகநாதனுக்கு பரிந்துரை செய்யவில்லை என கூறினார். மாவட்டச் செயலாளர் பரிந்துரை இல்லாமல் தலைமை அவருக்கு பதவி வழங்குமா ?என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
எது எப்படியோ கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு திமுக இளைஞரணியில் பதவிகள் கொடுக்காமல் இருந்தால் சரி.