தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க கிராமங்களை நோக்கி திமுக
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் மர்மாகவே உள்ளது ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மற்றும் சசிகலா குடும்பம் என இதற்கு யார் காரணமாக இருந்தாலும் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் அவர்களை கண்டு பிடித்து சிறையில் அடைப்பதுதான் முதல் வேலை என தெரிவித்தார்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தமிழகத்தின் அவல நிலைக்கு என்ற தலைப்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.அதன்படி திருவாரூரில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் அதன் பிறகு தஞ்சாவூர் வந்து ஓய்வெடுத்தார்.பின்னர் 5 மணிக்கு மேல் மாதாக்கோட்டை பகுதியில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பெண்கள் அனைவரும் ஸ்டாலினை இளைய தளபதி என்று புகழ்ந்து பேசியதோடு பாட்டும் பாடினர். அவர்களுக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் ஸ்டாலின்.
பின்னர் ஊராட்சிக்கு உட்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு மனுக்களையும் பெற்று கொண்டார்.
மக்கள் கூறிய குறைகள் அனைத்தும் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் நிறைவேற்றி கொடுக்கப்படும் என்று கூறிய ஸ்டாலின் பின்னர் பேசியதாவது, தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவருடைய மருத்துவ அறிக்கை அனைத்தையும் திமுக செயல் தலைவர் என்ற முறையில் என் சார்பாகவும் கட்சியின் சார்பாகவும் மருத்துவமனையின் சார்பாகவும் அவ்வப்போது மக்களுக்கு அறிக்கையின் மூலமாக தெரியபடுத்தி வந்தோம்.ஆனால் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அது குறித்த அறிக்கையை முறையாக கூறவில்லை.
நானே ஜெயலலிதாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது என்னவென்று கவனித்து பாருங்கள் என கூறியிருக்கிறேன். ஆனால் இன்னமும் அவரது சாவில் மர்மம் இன்னமும் நீடித்துக் கொண்டுள்ளது ஏற்கனவே நாங்கள் அவர் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம் தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை என்ற பெயரில் ஒரு நாடகமாக நடைபெறுகிறது. இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மற்றும் சசிகலா குடும்பம் என இதற்கு யார் காரணமாக இருந்தாலும் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் அவர்களை கண்டு பிடித்து சிறையில் அடைப்பதுதான் முதல் வேலை. நாம் ஜெயலலிதாவோடு கொள்கை ரீதியாக முரண் பட்டு இருந்தாலும் இதை நாம் செய்ய வேண்டும். முதலமைச்சராக இருந்தவருக்கே இந்த நிலைமை என்றால் மக்களின் நிலையை பாருங்கள். தற்போது தமிழகத்தில் உள்ள அரசு தூக்கு கயிற்றில் தொங்குகிறது, இந்த அரசை மத்திய பாஜக அரசு தான் பாதுகாத்துக் கொண்டுள்ளது. இந்த இரண்டு அரசுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவை தி.மு.கவின் தொடக்க புள்ளியாக அமைய வேண்டும், நாம் யாரை சொல்கிறோமோ யாரை விரும்புகிறோமோ அவர்கள் தான் பிரதமராக வர வேண்டும் அப்போது தான் தமிழகத்தின் நல்ல திட்டங்கள் நிறைவேறும் என்றார்.