வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. பகுதிசபா கூட்டத்தில் கோரிக்கை
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபா கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் இன்று நடைபெற்றது. பரமக்குடி 28 வது வார்டில் நகர மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அதே போல் 28 வது வார்டில் நகரமன்ற உறுப்பினர் தனலட்சுமி, 35 வது வார்டில் நகரமன்ற உறுப்பினர் குணா, 13 வது வார்டில் நகரமன்ற உறுப்பினர் அப்துல் மாலிக் ஆகியோர் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், தினசரி தெருக்களை சுத்தம் செய்து, ப்ளீச்சிங் பவுடர்கள் தெளிக்க வேண்டும், மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் எடுப்பது தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.