போலீஸ் பெயரில் போலி ஏ.டி.எம் கார்டு ! லட்சக்கணக்கில் மோசடி .
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட சாமுண்டிபுரம் எம்.ஜி.ஆர் நகரில் குடியிருந்து வரும் எம்.கே. சிவக்குமார் என்பவர் தனது மனைவி மகளுடன் வசித்து வருகிறார். மேலும் கடந்த 1993 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்து நீலகிரி மாவட்டத்தில் போலீசாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படைக்கு மாற்றப்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளராக திருப்பூருக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு காவல்துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இதனிடையே தமிழக காவல்துறையில் பணியாற்றியபோது அரசுடமையாக்கப்பட்ட வங்கியிலும், ரயில்வே போலீஸில் வேலைபார்க்கும் போது தனியார் வங்கியிலும் சிவக்குமாரின் மாத ஊதியம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கருவூலத்தில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் கணக்கு பதிவில் இருந்துள்ளது. இதனிடையே சிவக்குமார் பணியில் இருந்து ஓய்வு பெற்ற போது பணிக்கொடை பலனாக சுமார் ரூபாய் 9.50 லட்சம் வரை கணக்கில் வரவேண்டியிருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுடமையாக்கப்பட்ட வங்கிக்கு சென்று ஓய்வு பெற்றதற்கான பணிக்கொடை வந்துள்ளதா என விசாரித்துவந்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக பணம் வங்கிக்கணக்கிற்கு வராததால் ரயில்வே போலீசில் தனது நண்பர் மூலமாக விசாரித்தபோது பணிக்கொடை பலன்களான 9 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை தனியார் வங்கியில் செலுத்திவிட்டதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அங்கு சிவக்குமாரின் வங்கி கணக்கை சரிபார்த்தபோது ரசீது மூலமாகவும் ஏ.டி.எம் கார்டை பயண்படுத்தியும் சுமார் 9 லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் ரசீதில் இருந்த கையெழுத்து போலியாகவும், போலி ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி மோசடி செய்ததாக கூறி சிவக்குமார் தனது மனைவி மகளுடன் தனியார் வங்கி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனிடையே மோசடி குறித்து பேசிய சிவக்குமார் கூறும்போது தனது மகளின் திருமணத்திற்காக இருந்த பணத்தை வங்கியில் போலி ஏ.டி.எம் மூலம் மோசடி செய்துள்ளதால் தனது மகளின் திருமணம் நின்றுபோனதாகவும், இது குறித்து காவல் துறை மற்றும் ரிசர்வ் வங்கிக்கும் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பெயரில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.