அரசு பேருந்து ஜப்தி ! பயணிகள் வாக்குவாதம் ! பரமக்குடியில் பரபரப்பு !

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் வினோத், இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் பரமக்குடியில் சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து வினோத் பரமக்குடி நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு மனுதாரருக்கு ரூபாய் 14 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்ற உத்தரவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இழப்பீடு வழங்காமல் காலதாமதம் செய்துள்ளனர்.

இதனையடுத்து அரசு பேருந்தை ஜப்தி செய்ய பரமக்குடி சார்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ் உத்தரவிட்டுள்ளார். அதனையடுத்து பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போது பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.