“நாங்கள் நெருப்பு பறவைகள் கூட்டம்” : தேனி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் தமிழகமெங்கும் குறிப்பாக தென் மாவட்டங்களிலும் எந்த ஒரு கூட்டணியும் இல்லாமல் கணிசமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்களின் வெற்றி அதிமுக திமுக கூட்டணி கட்சிகளையும் மற்றும் அரசியல் விமர்சகர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
தேர்தல் நடந்த 24 மாவட்டங்களில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் எதிர்பார்க்காத நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் முழுமூச்சில் தமிழகம் முழுவதும் தனித்து நின்று உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் களம் இறங்கியது. இந்நிலையில் ஆளும் அண்ணா திமுக கட்சியினர் குறிப்பாக ஜெயக்குமார் போன்ற சில மந்திரிமார்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் டிடிவி தினகரன் மீது தரம் தாழ்த்தி பல விமர்சனங்களை அள்ளி வீசியது எல்லோரும் அறிந்ததே.
கூட்டணிக் கட்சிகளின் பலத்தை மட்டுமே நம்பி ஆளும் அண்ணா திமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் களத்தில் இறங்கினர். இக்கட்சிகளோடு தனித்து நின்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்பட பல சுயேச்சைகளும் தேர்தலில் போட்டியிட்டனர்.
அதிமுக ஆட்சி அதிகார பலம் பணபலம் கூட்டணிக் கட்சிகளின் பலம் இப்படி மூன்று விதமான பலங்களையும் முழுவீச்சில் களத்தில் பயன்படுத்தியும் பலன் இல்லை என்ற நிலையை தேர்தல் முடிவு காட்டியது. அதிமுகவின் கூட்டணியில் உள்ள மத்திய அரசான பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டம் கொண்டு வந்ததன் விளைவால் என்னவோ சிறுபான்மை மக்களின் முழு ஆதரவு எதிர்க்கட்சியான திமுகவுக்கு கிடைத்து ஆளும் கட்சியை விட அதிகமான இடங்களை கைப்பற்றியது என்று கூட சொல்லலாம்.
இருப்பினும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி வேட்பாளர்கள் மாநில பெரிய கட்சிகளான அதிமுக-, திமுக கட்சிகளைப் போல் இரட்டை இலை, உதயசூரியன் போன்ற நிரந்தரமான சின்னங்கள் இல்லாமல் தனக்கு கிடைத்த மக்கள் மனதில் உறுதிப் படாத ஓட்டை சாட்டை சுயேட்சை சின்னங்கள் வைத்து நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மாநிலம் முழுவதும் 98 இடங்களை கைப்பற்றி தரம் தாழ்த்தி விமர்சனம் செய்த ஆளும்கட்சி மந்திரிமார்களின் வாய்களுக்கு பூட்டு போட்டு வியப்பை ஏற்படுத்தி உள்ளதாக பலதரப்பட்ட அரசியல் விமர்சகர்கள் ஊடகங்கள் மீடியாக்கள் வாயிலாக தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தேனி துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் அவரின் சொந்த ஊரான பெரிய குளத்திலும் அவர் வெற்றி பெற்ற போடி தொகுதியிலும் மற்றும் ஆண்டிபட்டி உத்தமபாளையம் ஆகிய ஒன்றியப் பகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் 5 பேர் கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ளதால் ஒருசில யூனியன் தலைவர் பதவிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களின் ஆதரவு திமுகவிற்கு தேவைப்படும் அத்தியாவசியமும் அமைந்துள்ளது. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் புள்ளிமான் கோம்பையில் 6 வது வார்டில் தர்மராஜ் என்பவரும் ஏத்த கோவில் வார்டு 9 ஜக்கையன் என்பவரும் உத்தமபாளையம் ஒன்றியம் ராயப்பன்பட்டி மதன்குமார் என்பவரும் பெரியகுளம் ஒன்றியம் 1-வது வார்டில் மருதை அம்மாளும் போடி ஒன்றியம் 1-வது வார்டில் அணைக்கரை பட்டியில் ரகுபதியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வெற்றி பெற்றுள்ளனர்.
ஆக துணை முதல்வரின் ஆதரவு பெற்ற சில வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததால் கோபமுற்று வாக்குக்கு கொடுத்த பணத்தை மக்களிடம் திருப்பி கேட்டு அச்சுறுத்தி வருவதாகவும் இணைய தளங்களின் வாயிலாக வைரலாகி வருகிறது.. தேனி மாவட்டத்தை பொருத்தமட்டில் மாவட்ட அளவிலான அடிப்படையில் அதிமுக 48% திமுக 38 சதவீதமும் அமமுக 9.30 சதவீதமும் பெற்றுள்ளனர்..
ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் அமமுக வெற்றி பெற்ற ஐந்து இடங்களில் 11 சதவீத வாக்குகளும் பெற்று மூன்றாவது இடத்தை தேனி மாவட்டத்தில் தக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் முழு வெற்றி கிடைக்காததால் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கட்சிப் பிரமுகர்களிடம் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை என தொண்டர்கள் முணுமுணுத்து வருகின்றனர். தனது புதல்வன் ரவீந்திரநாத் வெற்றி கூட பல கோடிகள் பணத்தை அள்ளி இறைத்து செலவு செய்து தான் எம்பி பதவியை தக்கவைக்க முடிந்ததாகவும் மாவட்ட பொறுப்பில் இருப்பவர்கள் மக்கள் மத்தியில் தற்சமயம் செல்வாக்கு அற்றவர்களாக இருப்பதாகவும் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பணம் கொடுத்தால்தான் தேர்தல் வேலை செய்வதாகவும் ஓ.பி.எஸ். மன இறுக்கத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளதாக பேசப்படுகிறது ஆகவே இனரீதியாக அதிமுகவில் மாவட்ட பொறுப்பில் இருக்கும் சில நிர்வாகிகளை மாற்றி அமைத்தால் தொண்டர்கள் கட்சி பணியில் தீவிரமாக பணியாற்றுவார்கள் என சிலர் யோசனை தெரிவித்ததாக பலர் பேசிக் கொள்கின்றனர்..
இது ஒரு பக்கம் இருந்தாலும் தேனி மாவட்டத்தில் எந்த நிலையிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் நாங்கள் நெருப்பு பறவைகள் கூட்டம் .. எங்களை அழிக்க நினைத்தாலும் அழிக்க முடியாது நெருப்பு பறவைகள் போல மீண்டும் மீண்டும் வருவோம் மீட்சி பெறுவோம்… டிடிவி தினகரன் … சின்னம்மாவின் ..கரத்தை வலுப்படுத்துவோம் என மார்பு தட்டுகின்றனர்…
- ராஜசிம்மன்