திமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். காலியான இரண்டு இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இரண்டு இடங்களுக்கும் வேட்பாளர்கள் பெயர்களை திமுக அறிவித்தது. கனிமொழி என்விஎன் சோமு, கேஆர்என் ராஜேஷ்குமார்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ராமசாமியின் பேரன் கேஆர்என் ராஜேஷ்குமார். திமுகவை தொடங்கிய ஐம்பெரும் தலைவர்களில் அதாவது அண்ணாதுரை, நெடுஞ்செழியன், ஈவிகே.சம்பத், என்.வி.நடராஜன், மதியழகன் ஆகியோரில் என்வி நடராஜனின் பேத்திதான் டாக்டர்.கனிமொழி. இந்த இரண்டு பேரும் திமுகவின் மூன்றாவது தலைமுறைகள். டாக்டர் கனிமொழி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் படித்தவர்.
கடந்த 15 ஆண்டுகளாக அப்பலோ மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ ஆலோசகராக இருந்து வருகிறார். திமுகவின் மருத்துவ அணி செயலாளராகவும், இருந்து வருகிறார். 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டார்.
2011 சட்டமன்றத் தேர்தலில் மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு முப்பத்து ஐந்தாயிரம் வாக்குகளில் அதிமுக வேட்பாளர் மாதவரம் மூர்த்தியிடம் தோல்வியடைந்தார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக தலைமை. அப்போது மூன்றாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த இரண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு கனிமொழிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தான் மாநிலங்களவைக்கான வேட்பாளர்கள் பெயர்களில் கனிமொழியின் பெயரை அறிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
2021 சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைந்த முக்கிய முகங்களுக்கு மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியிடம், தோல்வியடைந்த கார்த்திகேய சிவசேனாதிபதி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து போட்டியிட்ட தங்க தமிழ் செல்வன் ஆகிய இருவரின் பெயர்கள் அடிபட்டது. இந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை விட தேர்தலில் போட்டியிடாதவர்களுக்கு மாநிலங்களவைக்கு வாய்ப்பு வழங்கலாம் என்ற பேச்சும் திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது. போட்டியிடாதவர்களுக்கு வாய்ப்பு என்ற பட்டியலில் இடம் பிடித்தவர்தான் டாக்டர் கனிமொழி. கனிமொழிக்கு மாநிலங்களவைக்கு வாய்ப்பு வழங்கலாம் என ஏற்கனவே பேசப்பட்டது.
கனிமொழியின் தந்தை என்விஎன் சோமு வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில் 1984, 1996 தேர்தல்களில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். 2011, 2016 தேர்தல் தோல்விக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரம்பூர் தொகுதியை கனிமொழி எதிர்பார்த்ததாகவும், கடைசி நேரத்தில் அவரது பெயர் இடம் பெற வில்லை எனவும் பேசப்பட்டது.
மேலும் மருத்துவ அணிச் செயலாளராக கனிமொழி இருந்தாலும் பல நேரங்களில் தான் புறக்கணிக்கப்படுவதாகவும், 2011, 2016 தேர்தல்களில் தான் தோல்வியடைந்ததற்கு திமுக நிர்வாகிகள் தான் காரணம் என்றும் தனது ஆதங்கத்தை திமுக தலைவரிடம் கூறியதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் தான் மாநிலங்களவைக்கு கனிமொழிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் பேசப்பட்டது. காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களில் ஒரு பெண் பிரதிநிதியை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் திமுக ஆர்வம் காட்டியது. பல நாட்கள் காத்திருப்பிற்கு பிறகு கனிமொழிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இருவருக்குமுள்ள ஒற்றுமை என்னவென்றால் இருவருமே திமுகவின் மூத்த தலைவர்களின் வாரிசுகள் மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி, கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகிய இருவரின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- சூரிகா