பல்லடத்தில் பள்ளிச் சிறுமியை தாக்கியதாக தனியார் பள்ளி ஆசிரியை மீது புகார்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மங்கலம் சாலையில் உள்ள பள்ளிவாசல் வீதியில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 2000 மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் பல்லடம் ஐயப்பன் கோயிலை சேர்ந்த ரவிச்சந்திரன், ராமதிலகம் தம்பதியரின் 4 வயது குழந்தையை யூகேஜி வகுப்பில் சேர்த்திருந்தனர். இந்நிலையில் கடந்த 21 அம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வந்த போது சோர்ந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது பள்ளியில் ஆசிரியை அடித்ததாக கூறி அழுதுகொண்டே கூறியுள்ளாள்.
இதனை அடுத்து பள்ளிக்கு சென்று நேரில் விசாரித்தபோது பள்ளி நிர்வாகம் உரிய பதில் அளிக்காததால் தனது மகளை பள்ளியில் இருந்து நிறுத்தி விடுவதாகவும் கட்டணத்தை திருப்பித்தர கோரியுள்ளனர். கட்டணத்தில் ஒரு பகுதியை தந்து விட்டனர். இதனை அடுத்து தனது 4 வயது மகள் கடந்த 21 ஆம் தேதி தனியார் பள்ளி ஆசிரியையால் தாக்கப்பட்டதாக கூறி இன்று 26.09.2022 ஆம் தேதி பல்லடம் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர், ஆனால் காயம் எதுவும் இல்லாத நிலையில் உள் நோயாளியாக சிகிச்சை பெறத் தேவையில்லை என கூறி வெளி நோயாளியாக சிகிச்சை அளித்து அனுப்பி விட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிறுமியின் பெற்றோர், திருமணமாகி வெகு ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை என்பதால் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்ததாகவும், பள்ளிக்கு சென்ற தனது 4 வயது மகளை குச்சியால் அடித்ததால் கடந்த 29.08.2022 அன்று தயவு செய்து குழந்தையை குச்சியால் அடிக்க வேண்டாம் என டைரியில் எழுதி அனுப்பியதாகவும், அதற்கு பதில் அளித்த வகுப்பு ஆசிரியை குச்சியால் குழந்தையை அடிக்க விக்லை என எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டனர். மேலும் சம்பவத்தன்று தனது மகளை ஆசிரியை தாக்கியதால் பயந்து போய் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் பள்ளி சிறுமி தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது தலைமை ஆசிரியை விளக்கமளித்தார். தங்களது பள்ளியில் சிறுமி நேரடியாக யூகேஜி வகுப்பில் சேர்க்கப்பட்டதாகவும், சேர்க்கப்பட்ட நாளில் இருந்து பெற்றோர்கள் ஏதாவது ஒரு புகார் கூறி பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் தங்களது குழந்தையின் படிப்பை தொடர விருப்பமில்லை என தெரிவித்த பெற்றோர் கட்டணத் தொகையை கடந்த 21.09.2022 அன்று திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் அதற்கு சான்றாக எழுதிக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் காலம் தாழ்த்தி தங்களது பள்ளி மீது வீண் பழி சுமத்தி வருவதாகவும் தெரிவித்தனர். தவறு யார் பக்கம் என்பது குறித்து பட்டியலிடுவதை விடுத்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தீவிர விசாரணை மேற்கொண்டு தவறு நடந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுத்து 4 வயது சிறுமியின் எதிர்கால வாழ்வு சிறக்க இடைநில்லா கல்வியை உறுதி செய்யவேண்டும்.