தமிழகம்

திருப்பூர் ரயில் நிலையத்தில் மயக்க பிஸ்கட் கும்பலிடம்… உடமைகளை இழந்த வடமாநில இளைஞர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணற்றில் உள்ள தனியார் நூல் ஆலையில் பணியாற்றி வருபவர் சகாதேவ் சவுத்ரி. வங்கதேசத்தை சேர்ந்த இவர் கள்ளகிணற்றிலேயே தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஒரு மாத காலம் விடுமுறை கிடைத்ததால் சகாதேவ் தனது சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது அருகில் இருந்த வட மாநில இளைஞர்கள் சிலர் சகாதேவ் சவுத்ரியிடம் பேச்சுக் கொடுக்க தொடங்கியுள்ளனர். பின்னர் தாங்களும் அதே ஊருக்கு தான் செல்கிறோம் என பேச்சு கொடுத்த அந்த இளைஞர்கள் சகாதேவ் சவுத்ரிக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டை வழங்கியுள்ளனர்.

ஒரே ஊர்காரர் என்ற எண்ணத்தில் சகாதேவ் சவுத்ரியும் அந்த பிஸ்கட்டை சாப்பிட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் சகாதேவ் சவுத்ரி மயக்க நிலைக்குச் சென்றதும், அவரிடம் இருந்த 23 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன்களை பறித்துக் கொண்டு அவரது பைகளையும் ஆடைகளையும் பறித்துக் கொண்டு நிர்வாணமாக ரயில் நிலையம் அருகே வீசி சென்றுள்ளனர். மூன்று நாட்களாக மயக்க நிலையில் நிர்வாணமாக கிடந்த சகாதேவ் சௌத்ரியை நேற்று அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பல்லடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பல்லடம் வந்த சகாதேவ் சவுத்ரி அவர் பணிபுரியும் ஆலையின் பாதுகாப்பு அதிகாரிக்கு தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார். பின்னர் மயக்க நிலையில் இருந்த சகாதேவை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உடல்நலம் மிகவும் மோசமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். வட மாநிலத்தவர்களின் வருகை திருப்பூருக்கு அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் சொந்த மாநிலத்தவரான சகாதேவ் சவுத்ரியை நிர்வாணப்படுத்தி கொள்ளையடித்த சம்பவம் திருப்பூர் மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button