தமிழகம்

உதகையில் பிடிபட்ட வெட்டுக்கிளிகள்… மாவட்ட ஆட்சியர் விளக்கம்

இந்தியாவில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெட்டுக்கிளிகளின் தாக்குதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், ஹெலிகாப்டர்கள் மூலம் மருந்து தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள் வடமாநிலங்களில் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் பயிர்களை துவம்சம் செய்துள்ளன.

இந்த வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக 120 கணக்கெடுப்பு வாகனங்களையும், தெளிப்பு உபகரணங்களைக் கொண்ட 47 கட்டுப்பாட்டு வாகனங்களையும், ஸ்பிரேயர்கள் பொருத்தப்பட்ட 810 டிராக்டர்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் இருந்து பூச்சிக்கொல்லி தெளிக்கும் அதிநவீன 60 டிரோன்கள் வாங்கப்பட உள்ளன. இவற்றில் 15 ட்ரோன்கள் அடுத்த 15 நாட்களில் இந்தியா வந்து சேரும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் மூலம் வானிலிருந்து பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்படவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் மஹாராஷ்டிரா மற்றும் சட்டிஸ்கர் எல்லையில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் வெட்டுக்கிளிகளின் தாக்குதலை தடுக்க விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் பந்தாராவில் கிருமிநாசினியை தெளித்து வெட்டுக்கிளிகளை அதிகாரிகள் விரட்டி வருகின்றனர்.

உள்ளூர் மக்கள் தங்களின் பங்கிற்கு டிரம்ஸ் களை வாசித்து வெட்டுக்கிளிகளை விரட்ட முயன்று வருகின்றனர். இமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா, உனா, பிலாஸ்பூர் மற்றும் சோலன் மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வேளாண் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது,

தமிழகத்தில், உதகையை அடுத்துள்ள காந்தள் பகுதியில் தென்பட்ட புதிய ரக வெட்டுக்கிளியை பிடித்த வியாபாரிகள், இது வடமாநிலங்களில் வேளாண் பயிர்களை அழிக்கும் ரகத்தை சேர்ந்ததாக இருக்குமோ என அச்சமடைந்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, உதகையில் பிடிபட்டது பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என முதற்கட்ட சோதனையில் தெரியவந்திருப்பதாகக் கூறினார்.

வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்குள் வராது என்று அதிகாரிகள் தெரிவித்தபோதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறைத் தலைவர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஒருவேளை பாலைவன வெட்டுக்கிளிகள் வந்தாலும் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button