காரை நடுவழியில் நிறுத்தி விட்டு தப்பியோட்டம்..! : தீவிரவாதிகளா என போலீஸார் விசாரணை…
கோவையில் இருந்து பரமக்குடிக்கு காரை கடத்தி வந்து நடுவழியில் விட்டுச் சென்ற நபர்கள், தீவிரவாதிகளாகவோ, அல்லது தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நபர்களாகவோ இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் தனது மகன் அருண்சங்கருக்கு பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கி கொடுத்துள்ளார். அருண்சங்கரிடம் இருந்து காரை அவரது நண்பர் பாட்ஷா என்பவர் கடந்த ஜூலை மாதம் வாடகைக்கு வாங்கியுள்ளார்.
அப்போது ஒரு மாதத்திற்கான வாடகைத் தொகையை மட்டுமே பாட்ஷா கொடுத்துள்ளார். அதன்பிறகு வாடகையையும் கொடுக்காமல், காரையும் திருப்பி அளிக்காமல், பாட்ஷா ஏமாற்றி வந்துள்ளார். இதனால் காரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் அது செல்லும் திசையை அருண்குமார் கண்காணிக்க ஆரம்பித்தார். பின்னர் ராணிப்பேட்டையில் உள்ள நண்பர்கள் கவுதமன் மற்றும் தனுஷ் ஆகியோரிடம், காரை பாட்ஷா எடுத்துச் சென்று ஏமாற்றி வருவது குறித்து அருண்குமார் கூறினார்.
இதனை அடுத்து ஜிபிஎஸ் கருவி வழிகாட்டுதலில் காரை அவர்கள் 2 பேரும் பின்தொடர ஆரம்பித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு கார் வந்தபோது, அதை 2 பேரும் நிறுத்த முயற்சித்தனர். ஆனால் காரில் இருந்தவர்கள், அதை நிறுத்தாமல் சென்று விட்டனர்.
பின்னர் பரமக்குடி பொன்னையாபுரம் அருகே உள்ள பாலன் நகரில், காரை நிறுத்திவிட்டு அதிலிருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் போலீஸார் கார் கண்ணாடியை உடைத்து சோதனையிட்ட போது அதில் 2 பாஸ்போர்ட்டுகள், 3 செல்போன்கள், சங்கேத பாஷையில் எழுதப்பட்ட கடிதம் ஆகியவை சிக்கின.
பாஸ்போர்ட்டில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த அப்துல் காசிம், தொண்டியை சேர்ந்த நைனார் சித்திக் ஆகியோரின் பெயர்கள் இருந்தன. இவர்கள் 2 பேர் மீதும் போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்தல், இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தல் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த காரை வாடகைக்கு எடுத்து கடத்தி வந்த பாட்ஷா எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. பாட்ஷாவுக்கும், காரிலிருந்து கைப்பற்றப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் உள்ள புகைப்படங்களில் இருக்கும் நபர்களுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் தெரியவில்லை.
ஆதலால் பாட்ஷாவும், புகைப்படங்களில் இருக்கும் நபர்களும் தீவிரவாதிகளாகவோ அல்லது தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு உடையவர்களாகவோ இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.