கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தென்தமிழகத்தை தன் பிடியில் வைத்திருந்தவர் அழகிரி. மதுரை மண்ணின் அரசியல் ஹீரோவாக ஜொலித்தவர். ஆனாலும் சில பிரச்சனைகள் காரணமாக சில வருடங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது கருணாநிதி மறைவுக்குபின் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். மீண்டும் அவரை கட்சியில் சேர்க்க குடும்பத்திலேயே பலர் முயல்கிறார்கள். கருணாநிதி காலத்திலேயே இது நடந்தது. ஆனால் ஸ்டாலின் தரப்பின் எதிர்ப்பால் இது கைகூட வில்லை.
மீண்டும் அவரை சேர்த்து தென்மண்டல பொறுப்பாளர் பதவி கொடுக்கலாம் என பரிசீலிக்கப்பட்ட நிலையில், அது தனக்கு வேண்டவே வேண்டாம்… மாநில அளவிலான பதவிதான் வேண்டும் என்று அழகிரி நிர்பந்தித்தாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால் தற்போது அன்பழகன் ரூபத்தில் அழகிரிக்கு பேராபத்து வந்துள்ளது. அழகிரியை கட்சியில் சேர்க்கவே கூடாது என்று அன்பழகன் திட்டவட்டமாக கூறி விட்டதாக சொல்கிறார்கள்.
சமீபத்தில் மு.க.ஸ்டாலின் அன்பழகனைப் போய்ப் பார்த்தபோது இதுகுறித்துப் பேசியதாக சொல்லப்படுகிறது. அழகிரிக்கு பதவியா? லோக்சபா தேர்தல் முடியும் வரை அவரை சேர்க்காதீர்கள். சேர்த்தால் சரிவராது. நிர்வாகம் சீர்குலையும். இப்போது எல்லாமே நல்லா போய்ட்டிருக்கு. இதை சீர்குலைக்க அனுமதித்தால் பெரும் பாதகமாக போய் விடும். யார் சொன்னாலும் சரி, எங்கிருந்து நெருக்கடி வந்தாலும் சரி, மீண்டும் திமுகவுக்குள் அழகிரி வரவே கூடாது என்று ஸ்டாலினிடமே அன்பழகன் தெரிவித்து விட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கட்சியின் மூத்த தலைவர், திமுக என்னும் பாரம்பரிய ஸ்தாபனத்தை பன்னெடுங்காலம் வழிநடத்திய முக்கிய தலைவர் அன்பழகனே இவ்வாறு சொல்லிவிட்டதால் அழகிரி விஷயத்தில் ஸ்டாலினின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்ன மாதிரியான முடிவினை எடுக்க போகிறார்? குடும்பத்தார்களை அனுசரித்து சென்றால்தான் கட்சியை வழிநடத்த முடியும் என்று ஸ்டாலின் யோசிப்பாரா? இல்லை, திமுக தரப்பின் அதிருப்திகளை எல்லாம் மனதில் வைத்து யோசிப்பாரா? மூத்த தலைவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் வேலையில் இறங்குவாரா? தெரியவில்லை.
இருப்பினும் மு.க.ஸ்டாலின், கட்சிக்கு பங்கம் வராமல் இந்த விஷயத்தை அணுக வேண்டும். கூடவே, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி ‘அழகிரி எங்கே’ன்னு கேட்டுட்டு போனாரே…. அதையும் மனதில் வைத்து யோசிக்க வேண்டியது இப்போது மிக மிக முக்கியமானதாக உள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு குடும்பத்தினருடன் வருகை தந்த அழகிரி சிறிது நேரம் சமாதியில் வேண்டினார். பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்து தலைவர் கருணாநிதியிடம் எனது மன ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறேன். என்னுடைய ஆதங்கம் திமுக கட்சி தொடர்பானது தான். எனது ஆதங்கம் என்ன என்பதை ஒரிரு நாட்களில் தெரிந்து கொள்வீர்கள். திமுகவில் கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம்தான் உள்ளனர். நான் தற்போது திமுகவில் இல்லை. அதனால் கட்சியைப் பற்றி பேச மாட்டேன். என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.
அழகிரியின் பேட்டி வெளியான உடன் அவரது தொண்டர்கள் கட்சியின் பெயர் கலைஞர் திமுக என்றும் கருப்பு, சிவப்பு கொடியின் நடுவில் கலைஞரின் படமும் இருப்பதுபோல் வடிவமைத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விளம்பரப்படுத்த தொடங்கி விட்டனர்.
இதேபோல் ஏற்கனவே பன்னீர் செல்வம், ஜெயலலிதா சமாதியின் முன் அமர்ந்து தியானம் செய்துவிட்டு வந்து செய்தியாளர்களை சந்திக்கும்போதும், இதேபோல் தன்னுடைய ஆதங்கத்தை மனக்குமுறலை ஜெயலலிதாவின் ஆன்மாவிடம் தெரிவித்ததாக கூறியிருந்தார். அப்போது அதிமுகவினர் பன்னீர் செல்வத்தை, பாஜகவினர் தூண்டுகிறார்கள். அதனால்தான் பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிராக பேசுகிறார் என்றார்கள். அதேபோல் தற்போது அழகிரி கருணாநிதியின் நினைவிடத்தில் திமுகவின் உண்மையான தொண்டர்கள் தன்பக்கம் இருப்பதாக கருத்து தெரிவித்து இருப்பது பற்றி திமுகவினரும் பாஜகவினர் அழகிரியை தூண்டிவிட்டு திமுகவை அதிமுகவை போல் இரண்டாக உடைக்க நினைக்கிறார்கள். பாஜகவின் கனவு ஒருபோதும் நடக்காது. இதுபோன்ற எத்தனையோ சோதனையான காலகட்டத்தை எல்லாம் கடந்து வந்ததுதான் திமுக. திமுகவில் இருந்து வைகோ கட்சியை உடைத்தபோது கட்சியின் சின்னமும், கொடியும் முடக்கப்பட்டு மீண்டும் தலைவர் கலைஞர் தலைமைக்கு தீர்ப்பு வந்தது. இதுபோன்ற சோதனையான காலத்தில் எல்லாம் தலைவரோடு அருகே இருந்து அரசியல் செய்தவர் ஸ்டாலின். அதனால் கலைஞரின் தொண்டர்களான எங்களையும், கட்சியையும் காப்பாத்துவார் எங்கள் செயல்தலைவர் ஸ்டாலின் என்றனர்.
எது எப்படியோ ஸ்டாலினும், அழகிரியும் மாற்றுக்கட்சியினரின் சூழ்ச்சிக்கு இறையாகாமல் தனது தந்தை உயிருக்கும் மேலாக நேசித்த கட்சியையும், தொண்டர்களையும் ஒற்றுமையாக இருந்து வழிநடத்த வேண்டும் என்பதே பெரும்பாலான பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.