தமிழகம், புதுவை, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அந்தந்த மாநிலங்களின் பண்டிகை தேதி மற்றும் பள்ளிகள் இயங்கும் நாட்களுக்கு ஏற்றவாறு தேர்தல் தேதிகளை வரையறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வந்தது.
இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கறுகையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப் படவில்லை எனவும், இது தொடர்பாக எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை என தெரிவித்தார்.
புதிய வாக்காளர் சேர்ப்பு, வாக்காளர் நீக்கம் ஆகியவற்றிக்காக பெறப்பட்ட ஆவணங்களை வீடு வீடாக சென்று சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி வரும் 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கொரோனா பரவல் காரணமாக கூடுதலாக 30 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இதன் காரணமாக தேர்தல் பணிகளில் வழக்கமாக 3 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தபடும் நிலையில் வரும் தேர்தலில் நான்கு லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்குசாவடி அலுவலர், வாக்குச்சாவடி கண்காணிப்பு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.
இதனைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மருத்துவ சிகிச்சைக்கான காரணங்கள் தவிர தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கக்கூடாது என்றும் அவ்வாறு விலக்கு பெறும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடைபெற்ற சிறப்பு முகாம்களில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்கள் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் கூறினார்.
கொரானா காலகட்டம் என்பதால் ஒரு வாக்குசாவடியில் 1,000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், அதன் அடிப்படையில் தமிழகத்தில் தற்போது உள்ள 67,000 வாக்குசாவடி மையங்களை 95,000 வரை அதிகரிக்கும் பணி விரைவில் துவங்க உள்ளதாக சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதால், கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகராஷ்டிரம், மத்தியபிரதேஷம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படவுள்ளதாக கூறிய அவர், கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டி உள்ளதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்க 12 (D) என்ற படிவம் வழங்கவுள்ளதாகவும், தபால் வாக்கு அளிக்க விருப்பமுள்ளவர்கள் அந்த படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும் எனவும் இது தொடர்பான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
– ராபர்ட் ராஜ்