விதிமீறல் ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
விதிமீறல் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
டிராபிக் ராமசாமியின் உதவியாளர் கும்பகோணத்தைச் சேர்ந்த பாத்திமா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு : மதுரை நகரில் இயக்கப்படுமத் ஆட்டோக்களில் அதிகபட்சம் 10 பயணிகள் வரை ஏற்றுகின்றனர். சட்டப்படி 3 நபர்களை மட்டுமே ஏற்ற வேண்டும். பெரியார் நிலையம் பகுதியில் ஆய்வு செய்யுமாறு ஆர்டிஓ மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் புகார் அளித்தேன். அப்போது, நூறுக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் திரண்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். என்னை ஆபாசமான வார்த்தைகளால் திட்டினர். எனவே, விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றாமல் இயக்கப்படும் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்துசெய்வது அல்லது சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட நடவடிக்கை சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை செப்.18 ல் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.