தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள விவகாரம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைத் தரப்பிடமிருந்து சீமான் தரப்புக்குப் பணம் தரப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அ.வியனரசு எழுப்பியிருக்கிறார். இதுதொடர்பாக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு அவர் விரிவான கடிதம் எழுதியிருக்கிறார்.
சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றக் கோரி சென்னை சேப்பாக்கத்தில் மக்கள் நீதிக் கொற்றம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார் ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அ.வியனரசு. அதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், சீமான் புறக்கணிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்தான், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பி ஒன்பது பக்கங்கள் கொண்ட கடிதத்தை சீமானுக்கு வியனரசு அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “ஸ்டெர்லைட் நிறுவனம், ஆலையை இரண்டு மடங்கு விரிவாக்கம் செய்ய சுமார் 300 ஏக்கர் நிலத்தை தமிழக அரசிடமிருந்து பெற்றது தொடர்பாகவும், 1994-ல் தொடங்கிய ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் குறித்த விவரங்களையும் 2017 இறுதியில் தலைமைக் கழக அலுவலகத்தில் வைத்து உங்களிடம் விரிவாகப் பேசினேன். உங்களின் அனுமதியைப் பெற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2017 ஜூன் 3-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் குமாரரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் தன்னெழுச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியபோது நீங்கள் வந்து ஆதரவு தெரிவித்தீர்கள். ஆனால், அங்கு செல்லும் தகவலைக்கூட எனக்குத் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், மே 22-ம் தேதி மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் நானும் நம் கட்சியினர் 13 பேரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டோம். சட்ட வல்லுநர்களால் கட்டமைக்கப்பட்ட நமது கட்சியில், எங்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஏன் தம்பி? மன்சூர் அலிகான் சிறைப்பட்டபோது நம் சட்ட அறிஞர்கள் காட்டிய அக்கறையில் சிறிதளவுகூட எங்களிடம் காட்டாததற்குக் காரணம், ஏழை என்பதாலா அல்லது சாதி அடிப்படையிலான பாகுபாடா? எனக்குப் பிணை கிடைப்பதற்குக்கூட நம் வழக்கறிஞர்கள் உதவி செய்யாததால், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதனின் உதவியை நாடியதை நீங்கள் அறிவீர்களா? மே 22 துப்பாக்கிச்சூடு நடந்த பின்னர், நீங்கள் இரண்டு முறை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தீர்கள். அப்போதும் ஊருக்குள் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல் சென்றது ஏன்? மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ரகசியமாக வந்த நடிகர் விஜய் என்று பலரும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த நிலையில், நீங்கள் மட்டும் வராமல் இருக்கக் காரணம் என்ன?
‘தடை அதை உடை!’ என மேடைதோறும் முழங்குவதெல்லாம் வெற்றுக் கோஷம்தானா? இந்திய ராணுவம், இலங்கைப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி, தமிழீழம் சென்றுவந்த நீங்கள், சொந்த ஊருக்குள் வர முடியாத மர்மம் என்னவோ? நீங்கள் தூத்துக்குடியில் போராட்டத்தில் இருந்த மக்களை இரண்டாவது முறையாகப் பார்க்க வந்தபோது, கட்சியின் முதன்மை நிர்வாகி ஒருவரை ஆலையின் மக்கள் தொடர்பு அலுவலரின் உறவினரும் வழக்கறிஞருமான ஒருவர் சந்தித்தபோது, பெரும் தொகை கைமாறியதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து நீங்கள் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அ.வியனரசு கூறுகையில் “நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகியின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சீமான் தரப்புக்குப் பெரும் தொகை கைமாறியிருப்பதாகப் பேசப்படுகிறது. அதன் காரணமாகவே சீமான், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வரவில்லை என்றும் பேசுகிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டு ஒரு கட்சியை வலுவிழக்கச் செய்துவிடும் என்பதாலேயே சீமானுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை” என்றார்.