விவசாயிகள் பெயரில் ரூ. 300 கோடி கடன் மோசடி! -சி.பி.ஐ. விசாரணை கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை விவசாயிகளிடம் பல ஆண்டுகளாகப் பெற்ற கரும்புக்கு உரிய தொகையை வழங்காமல் திருஆரூரான் சர்க்கரை ஆலை ஏமாற்றி வருவதாகவும், 30 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகை உள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் கரும்பு நிலுவைத் தொகையைத் தருவதாகக் கூறி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தாளில் விவசாயிகளிடம் கையொப்பம் பெற்று அதனைத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் வழங்கி விவசாயிகள் ஒவ்வொருவரின் பெயரிலும் 2 இலட்ச ரூபாய் முதல் 25 இலட்ச ரூபாய் வரை கடன் பெற்று ஆலை நிர்வாகம் மோசடி செய்துள்ளதாக மேலும் ஒரு புகார் கூறப்பட்டுள்ளது.
வாங்காத கடனை வட்டியோடு திருப்பிச் செலுத்துமாறு வங்கிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காகப் பாபநாசம் வட்டாட்சியர் சர்க்கரை ஆலைச் சேமிப்பு கிடங்கைச் சில மாதங்களுக்கு முன்பு மூடிமுத்திரையிட்டார். இந்நிலையில் விவசாயிகளின் பெயரில் அவர்களுக்குத் தெரியாமலேயே 350 கோடி ரூபாய்க்கும் மேல் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துள்ளது.
ஆலை நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையின் மோசடிக்கு வங்கி அதிகாரிகளும் துணை போயிருப்பதால் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயிகளின் பெயரில் கடன் பெற்று மோசடி செய்துள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை வழங்க வேண்டிய நிலுவைத்தொகையைப் பெற்றுத் தர வேண்டும் என்பனவே விவசாயிகளின் கோரிக்கைகளாக உள்ளன.