இந்தியாதமிழகம்

தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம்!

புல்வாமா தாக்குதலில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரு தமிழக வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, பலியான மற்ற வீரர்கள் உடலுடன் தமிழக வீரர்களின் உடல்களும் டெல்லி கொண்டு வரப்பட்டு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் அஞ்சலிக்கு பின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவச்சந்திரன் உடல்களுடன் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த 2 வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் திருச்சி விமான நிலையம் வந்து சிவச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்போது சிவச்சந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து சிவச்சந்திரனின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றி சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
கார்குடி கிராமத்தில் உறவினர்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக சிவச்சந்திரனின் உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். நிர்மலா சீதாராமன் இங்கும் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் அஞ்சலி செலுத்தினார். சிவச்சந்திரனின் உடலுக்கு அவருடைய மகன் ராணுவ உடையில் அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல், சுப்பிரமணியன் உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஓபிஎஸ், கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி, எஸ்.பி. முரளிராம்பா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தூத்துக்குடி எம்எல்ஏ கீதாஜீவன் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சுப்பிரமணியன் உடல் சவலாப்பேரி இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் சவலாப்பேரி கிராமம் சோகத்தில் மூழ்கியிருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button