Uncategorized

தைரியமாக தனது கருத்துக்களை எழுத்தில் பதிவு செய்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன்

புதுச்சேரியில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

புற்றுநோய் காரணமாக கடந்த 21ம் தேதி உயிரிழந்த சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் பாரதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

பிரபஞ்சன் உடலுக்கு முதலமைச்சர் நாராயணசாமி தேசிய கொடியை போர்த்தி அரசு மரியாதை செலுத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எழுத்தாளர் பிரஞ்சன் தைரியமாக தனது கருத்துக்களை எழுத்தில் பதிவு செய்தவர் என்றும், அவரது இழப்பு புதுச்சேரிக்கும் எழுத்தாளர்களுக்கும் பேரிழப்பு என்றும் கூறினார்.

புதுவையில் பிறந்த பிரபஞ்சன் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கடலூர், சென்னை திருவல்லிக்கேணி போன்ற இடங்களை தனது வாசஸ்தலமாக கொண்டு வாழ்ந்து வந்தாலும் எப்போதும் புதுவையோடு தொடர்பில் இருந்தார்.

சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக சொந்த ஊரான புதுச்சேரிக்கே குடிபெயர்ந்தார். சில மாதங்களுக்கு முன் புதுவை அரசு பிரபஞ்சனுக்கு அவரது இலக்கிய பங்களிப்புக்கு பாராட்டுவிழா நடத்தி கவுரவித்தது.

கடந்த 57 ஆண்டுகாலமாக இலக்கிய பணிகள் ஆற்றிவந்த எழுத்தாளர் பிரபஞ்சன் சமீப காலமாக புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளானார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்தது. சிகிச்சைப் பலனின்றி அவர் மரணமடைந்தார்.

தமிழில் இலக்கியப் பத்திரிகைகள் தவிர, விகடன், குமுதம் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி பிரபல எழுத்தாளராகத் திகழ்ந்த பிரபஞ்சன் நாவல், சிறுகதை, கட்டுரைகள்  ஆகிய பிரிவுகளில் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

எளிய மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெறும் யதார்த்தமான சம்பவங்களை தனக்கே உரிய பாணியில் எழுதி மானுடம் பேசும் உயர்ந்த படைப்புகளை அவர் தமிழுக்கு அளித்தார்.

அவற்றில் வானம் வசப்படும், மகாநதி, மானுடம் வெல்லும் போன்ற நாவல்களும், ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், நேற்று மனிதர்கள் ஆகிய சிறுகதை தொகுதிகளும் புகழ் பெற்றவை. இவரது முட்டை நாடகம் பலமுறை அரங்கேற்றப்பட்டுள்ளது. இவரது படைப்புகள் பல்வேறு இந்திய மொழிகளில் மட்டுமின்றி பிரெஞ்சு, ஜெர்மனி, ஆங்கில மொழிகளிலும் வெளிவந்துள்ளன. பிரபஞ்சன் தனது வானம் வசப்படும் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருதுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button