தமிழகம்

பத்திரிகையாளர்கள் பத்திரிகையாளர்களாக நடந்து கொண்டதில்லை… : இயக்குனர் பாரதிராஜா

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் இயக்குனர் பாரதிராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி அவரது 40 ஆண்டுகால கலைப்பயணத்தைப் பாராட்டி கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, என்னுடைய முதல் படம் தொடங்கி இப்போது “விக்ரம்” வரையிலும் பத்திரிகையாளர்களின் பங்கு என் வாழ்நாளில் நிச்சயம் ஈடுசெய்ய முடியாதது. இதை மாநகரம் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூட சொல்லியிருந்தேன். அந்தப் படத்தில் நடித்தவர்கள் பலரையும் மக்களுக்கு தெரியவாய்ப்பில்லை. பத்திரிகையாளர்களான உங்களால் மட்டுமே இந்தப் படத்தை கொண்டு சேர்க்க முடியும் என கூறியிருந்தேன். அதன்படி பத்திரிகையாளர்கள் எனக்கு கொடுத்த ஆதரவுதான் இப்போது இந்த இடத்தில் நான் நிற்க காரணம். ஒவ்வொரு கட்டத்திலும் பத்திரிகையாளர்களின் ஆதரவும், உதவியும் சொற்களால் அடக்க முடியாது. எப்போது எங்கு நீங்கள் கூப்பிட்டாலும் நான் வர கடமைப்பட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட விழாவில் நான் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.

இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, பல வருடங்களாக சினிமா பத்திரிகையாளர்கள் விமர்சனம் எழுதி வருகின்றனர். தற்போது விமர்சனம் செய்வதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. விமர்சனம் பிறர் மனம் நோகாமல் அவர்களை திட்டாமல் விமர்சனம் செய்வதை இக்கால தலைமுறையினர் கடைபிடிப்பது சந்தோசமாக இருக்கிறது. நான் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் நட்பாக கலந்து கொண்டது இந்த நிகழ்ச்சியில் தான். எத்தனையோ நிகழ்ச்சிகள் நாட்டின் பல பகுதிகளில் பார்த்துவிட்டேன். ஆனால் ஊடகங்கள் என்னை அழைத்து பாராட்டுவதை நினைக்கும் போது நான் பாக்கியமாக கருதுகிறேன். சந்தோஷத்தில் இருக்கும்போது வார்த்தைகள் வசப்படாது. அப்படியான ஒரு தருணத்தில் தான் இப்போது இருக்கிறேன்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண் தலைவியாக கவிதா இந்த சங்கத்தை சரியான வழியில் கட்டி இழுத்துச் செல்கிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள் என்றார்.

மேலும் பேசுகையில்.. லோகேஷ் கனகராஜ் நான்கே படங்களில் நான்கு திசைகளையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார். விக்ரம் படம் பார்த்ததும் அவரை அழைத்துப் பேசினேன். நான் அவரைப் பார்த்தது கூட இல்லை. அந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் அவருடைய முந்தைய படங்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். ஏராளமான கற்பனைகள் சூழ உள்ளே வந்த லோகேஷ் கனகராஜிடம் மிகப்பெரிய கலைஞானம் உள்ளது.

கமல் ஒரு அற்புதமான கலைஞன். சினிமாவிற்காக பல விஷயங்களை இழந்திருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு விக்ரம் படம் தான் இதுவரை இழந்த அனைத்தையும் முதலீடாக அள்ளிக் கொடுத்திருக்கிறது. அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் தான். இப்படியான இயக்குனர்களை பார்க்கும் போது இவர்களுடன் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது வரை அடங்கவே இல்லை. நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு படங்களுக்கான கதைகள் எழுதி முடித்து விட்டேன். லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குனர்களுடன் சேர்ந்து ஓட வேண்டும் என்கிற நோக்கத்தில் எப்போதும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் சினிமாவிற்கு வராமல் இருந்திருந்தால் விவசாயம் பார்த்துக் கொண்டோ, தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டோ அல்லது திருமணம் செய்து குழந்தைகளுடன் சக மனிதனாக வாழ்ந்து போய் சேர்ந்திருப்போன். ஆனால் சினிமா என்னை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அப்படிப்பட்ட சினிமாவில் இந்த ஒரு ஜென்மம் அல்ல. ஏழேழு ஜென்மம் கிடைத்தாலும் சினிமாக் காரனாகவே வாழவேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அப்படித்தான் சினிமா பத்திரிகையாளர்களான நீங்களும் யாருக்குமே இல்லாத அளவிற்கு சினிமா பத்திரிகையாளர்களான உங்களிடம் சினிமா அறிவு இருக்கிறது. இவ்வளவு வருடங்களாக எந்த பத்திரிகையாளரும் என்னிடம் பத்திரிகையாளராக நடந்து கொண்டதே இல்லை. சக நண்பனாக இருந்து என்னை விமர்சனம் செய்வதை காட்டிலும் நிறைய பாராட்டி இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட விழாவில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் என மகிழ்ச்சியுடன் பேசினார்.

உறுப்பினர்களுக்கு சங்கத்தின் அடையாள அட்டையை இயக்குனர்கள் பாரதிராஜாவும், லோகேஷ் கனகராஜூம் இணைந்து வழங்கினர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆண் ஆதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் தலைவி கவிதா தலைமையிலான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button