தமிழகத்தில் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான வன்னியர் சமூக மக்களுக்கு திராவிட முன்னேற்ற கழகம் செய்துள்ள நன்மைகள், அவை எந்தெந்த காலகட்டத்தில் செய்துள்ளது என்பதையும், அதற்காக வன்னியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி மேற்கொண்ட முயற்சிகள் போன்றவற்றை ஆதாரப்பூர்வமாக ஆவணங்களுடன் வன்னிய இனத்திற்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்ற கழகமும்” என்ற தலைப்பில் ஒரு வரலாற்று ஆவண நூலை சி.என்.ராமமூர்த்தி எழுதியுள்ளார்.
இந்த நூலில் நமது நாற்காலி செய்தி இதழில் கடந்த செப்டம்பர் 1-15 இதழில் வெளியான இடஒதுக்கீடு போராட்டம் தியாகிகளின் எண்ணிக்கையில் குழப்பம் என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையில் 1987ல் நாடே திரும்பிப் பார்த்த மாபெரும் போராட்டமான வன்னியர்களின் இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், தடியடி பிரயோகத்திலும் சிக்கி 25 நபர்கள் பலியானார்கள்.
1989ல் கலைஞர் தலைமையில் திமுக அரசு அமைந்ததும் வன்னியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த சி.என்.ராமமூர்த்தி கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான 25 நபர்களையும் சமூக நீதி போராட்ட தியாகிகள் என அறிவித்ததோடு, தனது கையொப்பமிட்ட சான்றிதழையும் முதலமைச்சர் கலைஞர் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக அந்த தியாகிகள் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என வன்னியர் கூட்டமைப்பு சார்பில் பல ஆண்டுகளாக சி.என்.ராமமூர்த்தி கோரிக்கை வைத்து வந்தார்.
இதற்கிடையில் கடந்த தேர்தலுக்கு முன்பும் திமுக அரசு அமைந்ததும் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி சார்பில் திமுக தலைவரிடம் கோரிக்கை வைத்திருந்தார் சி.என்.ராமமூர்த்தி. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதலமைச்சரானார்.
முதலமைச்சராக பதவியேற்றதிலிருந்தே பல அதிரடிகளை செய்து வரும் ஸ்டாலின் 110 விதியின் கீழ் ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டார். இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியானவர்களின் நினைவாக விழுப்புரத்தில் 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரம் அதில் ஒரு குழப்பமும் ஏற்பட்டது.
1989ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞரால் 25 நபர்களுக்கு இடஒதுக்கீடு போராட்ட சான்றிதழும், உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இப்போதும் 25 நபர்கள் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் 21 நபர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்ததால், இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான தியாகிகள் 21 நபர்களா.. 25 நபர்களாக என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இது சம்பந்தமாக வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மணிமண்டப அறிவிப்புக்கு நன்றி தெரிவித்ததோடு, இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியானவர்கள் 21 நபர்கள் என அறிவித்ததில் ஏற்பட்ட குழப்பத்தையும் விளக்கிக்கூறி விடுபட்ட 4 நபர்களையும் சேர்த்து 25 தியாகிகளுக்கான மணிமண்டபமாக கட்டி எழுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்து ஆவணங்களையும் கொடுத்துவிட்டு வந்தார்.
முதல்வரும் அதை துறைரீதியாக சரி பார்ப்பதாகவும், விடுபட்டிருந்தால் சேர்த்துக் கொள்வதாகவும் சி.என்.ராமமூர்த்தியிடம் கூறியிருந்தார் என இடஒதுக்கீடு போராட்டத்தின் உண்மையான தகவல்களுடன், பலியான 25 தியாகிகளின் முழுவிவரங்களும், அவர்களின் தியாகத்தை அங்கீகரித்து அவர்கள் குடும்பங்களுக்கு திமுக அளித்த நன்மைகளின் முழுவிபரங்களையும் ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தோம்.
வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்ற கழகமும் என்ற ஆவண புத்தகத்தில் நமது நாற்காலி செய்தி இதழில் வெளியான கட்டுரையையும் ஆவணங்களாக சேர்த்து வெளியிட்டுள்ள நூலாசிரியர் சி.என்.ராமமூர்த்திக்கு நாற்காலி செய்திக்குழுமத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நூலுக்கு வாழ்த்துச் செய்தி எழுதியுள்ளார். இதில் வன்னியர்களுக்கு திமுக அரசு செய்த சாதனைகளை குறிப்பிட்டு அனைத்துக்கும் வாழும் சாட்சியாக இருப்பவர்தான் சி.என்.ராமமூர்த்தி. கலைஞர் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கிய போது வன்னியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் கையொப்பமிட்டவர் சி.என்.ராமமூர்த்தி. அதேபோல் இராமசாமி படையாச்சியாருக்கு சிலை வைக்க வேண்டும் என்று முதல்வர் கலைஞரிடமும், அன்று உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த என்னிடமும் கோரிக்கை வைக்க வந்த குழுவில் இடம் பெற்றிருந்தவரும் சி.என்.ராமமூர்த்தியே.
அத்தகைய நேரடிச் சாட்சியான அவர் இத்தகைய நூலை எழுதி இருப்பது பாராட்டுக்குரியது. திராவிட முன்னேற்ற கழகம் செய்து கொடுத்த காரியங்களை, கட்சிக்கு வெளியில் இருந்து ஒருவர் பாராட்டி எழுதிய பெருமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, அவரை வாழ்த்துகிறேன். இந்த நூல் அனைவர் கையிலும் இருக்க வேண்டும். பொய்மையைச் சுட்டெரிக்கும் அறிவாயுதமாகச் செயல்படட்டும் என எழுதியுள்ளார்.
மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், தற்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சருமான சிவசங்கர் ஆகியோர் அணிந்துரை எழுதியுள்ளனர்.
இந்த நூலை சமீபத்தில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்ற கழகமும் என்ற நூலில் இடம் பெற்றுள்ள செய்திகள் தற்போது அரசியல் கட்சித்தலைவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.