மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த பொதுமக்கள். பல்லடத்தில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பச்சாபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் அங்கு ஏற்கனவே மயானம் உள்ளதால் அப்பகுதியில் மின்மயானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் பச்சாபாளையம் பொதுமக்கள் தங்களது பகுதியில் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் விநாயம் மற்றும் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரன், வட்டாட்சியர் நந்தகோபால் மற்றும் துணை கண்காணிப்பாளர் சவுமியா ஆகியோர் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் பல்லடம்.பி.எம்.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அரசியல் கட்சியினர், பச்சாபாளையம் பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய நகராட்சி ஆணையாளர் விநாயகம், மின் மயானம் அமைவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என எடுத்து கூறினார். மேலும் தேர்வு செய்யப்பட்ட இடம் மயான பூமியாக மின்மயானம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார். ஆனால் கூட்டத்தில் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினால் ஆதரவும், ஆதரித்து பேசினால் கூட்டத்தில் எதிர்ப்பும் கிளம்பியது.
ஒரு கட்டத்தில் மின்மயானம் குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடந்து கொண்டருந்த போது எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் சேர்கள் காலியானது. பின்னர் மக்கள் கருத்தை அரசுக்கு அனுப்பிய பின்னர் நடவடிக்கை எடுப்பதாக கூறி நகராட்சி ஆணையாளர் கருத்து கேட்பு.கூட்டத்தை நிறைவு செய்தார்.