செல்பி எடுக்க வந்த முகம் தெரியாத ஒருவரை, நடிகர் சிவக்குமார் தள்ளிவிட, சமூக ஊடகங்களில் அவரை கொடூரமான கொலை குற்றவாளியை போல விமர்சனம் செய்தார்கள். அதே நேரத்தில் பொள்ளாட்சி சம்பவம் உட்பட பல குற்றச்சம்பவங்களில், அரசியல் வாதிகள் தொடர்பு இருப்பதாக எடுத்துக்காட்டும் ஆதாரங்கள் அனைத்துமே, எப்போதோ எடுக்கப்பட்ட போட்டோகள், சமூக ஊடங்களில் வெளியான மெஜேஸ்கள் போன்றவை தான்.
நாள் தோறும் ஆயிரக்கணக்கானவர்களை சந்திக்கின்றவர் தான் மக்கள் பிரதிநிதி. அவர்கள் ஒவ்வொருவரின் பூர்வீகத்தையும் விசாரித்துக் கொண்டு இருக்க முடியாது.
ஒரு குடும்பத்தில் மகன், மகள், மனைவி, கணவன் ஒருவருக்கு ஒருவர், 100 சதவீதம் நேர்மையாக இருப்பதில்லை. உதாரணமாக, காதல் ஜோடிகளை பெற்ற தாய், தந்தை, தங்கள் குழந்தைகள் யோக்கியமானவர்கள் தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த பொள்ளாட்சி சம்பவத்தில் கூட, ஒரே ஒரு பெண் தான் புகார் கொடுத்துள்ளார். சிக்கிய பல பெண்கள், இது போன்ற சம்பவம் நடந்து விட்டது என்று வீட்டில் கூட சொல்லி இருக்க மாட்டார்கள். வேறு சிலரோ, நரகலில் கால் வைத்து விட்டால் காலை வெட்டிக் கொள்ளவா முடியும் என்று கடந்து சென்று விட்டார்கள்.
இது போல, ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் அயோக்கியத்தனங்களையே, அதன் உறுப்பினர்கள் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அரசியல்வாதிகள் மட்டும், தங்கள் கட்சி தொணடர்களின் நதிமூலம் ரிஷி மூலம் பார்க்க வேண்டும் என்று நினைப்பது எப்படி சாத்தியம்.
மகளிர் காவல் நிலையங்களில் சென்று ,சிறிது நேரம் அமர்ந்து பார்த்தால், இப்படிக் கூட குடும்பங்கள் இருக்கின்றனவா என்று தெரியும். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சில கிளுகிளுப்பு நிகழ்ச்சிகளை பார்த்தால், எவ்வளவு யோக்கிய சிகாமணிகள் வாழ்கிறார்கள் என்று தெரியும்.
ஊடகங்களுக்கு, அரசியல் ஆனாலும் சரி, பொள்ளாட்சி போன்ற சம்பவங்கள் ஆனாலும் சரி, அப்போதைய பரபரப்பு தான் முக்கியம். அதிமுக பிரமுருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருக்கிறது என்று ஒரு சேனல் சொன்னால்,மற்றெரு சேனல் தேடி கண்டுபிடித்து, அவர் திமுக காரருடன் தொடர்பு கொண்டவர் என்று பரபரக்கும். மற்றொன்று இடதுசாரிகளுக்கும் இதில் தொடர்பு உண்டு என்று விவாதம் நடத்தும்.
ஆனால், தங்களுக்கு கிடைத்த எந்த ஆதாரங்களையும், அது நீதிமன்றத்தையோ, காவல்துறையை நாடியோ வழக்கு தொடரவோ, குற்றவாளிகள் தண்டனை பெறவோ உதவி செய்யாது.
பொள்ளாட்சி சம்பவம் நடந்து பல நாட்கள் யாரும் எதுவும் பேசவில்லை. நக்கீரன் வார இதழ் ஒரு கட்டுரையும், ஒரு வீடியோவும் வெளியிடுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், அது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிடுகிறார்.
இதன் பின்னர் மற்ற ஊடகங்களுக்கு பாசம் பொங்கி வழிகிறது. நக்கீரன் முதலில் கட்டுரை வெளியிட்ட போது இவர்கள் எங்கே போனார்கள் என்று யாரும் கேட்கமாட்டார்கள்.
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் வெளியான போது பரபரப்பை ஏற்படுத்திய இதே ஊடகங்கள் தான், பின்னர் அவர் கோர்டுக்கு வரும் போது அவருக்கு ஆதரவாக கருத்துக் கூறுவது போல கேள்வி கணைகளால் துளைத்து எடுத்தது. தற்போது அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது குறித்து யாரும் கருத்து கூறவில்லை.
ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுதினால், காவல்துறை உடனே கைது செய்ய வேண்டும். நீதிமன்றங்கள் வழக்கை விசாரிக்காமலே தீர்ப்பு வழங்க வேண்டும். அதுதான் நியாயம். இல்லாவிட்டால் காவல்துறை அரசியல்வாதிகளிடம் மண்டியிடுகிறது என்று அதற்கும் ஒரு காரணத்தை கூறி கேவலப்படுத்தும்.
சத்தியராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தில், போலீஸ் ஒரு குற்றவாளியை அடிக்கும். அதை மனித உரிமை மீறல் என்று பத்திரிக்கைகள் விமர்சனம் செய்யும். அதே நேரத்தில், நிருபர் வீட்டில் திருட்டுப் போகும். அப்போது சத்தியராஜ்( போலீஸ் இன்ஸ்பெக்டர்) குற்றவாளிகளிக்கு சாப்பாடு போட்டு சிகரெட் வாங்கி கொடுத்து, சார் வீட்டில் திருடினாயா என்பார்.
அவனோ இல்லை சார் என்றதும், சார் உங்கள் வீட்டில் திருடவில்லையாம் என்பார். பதட்டமான நிருபர் சார் அடிச்சு விசாரிங்க என்பார். இதே போல தான் ஊடகங்களும் உள்ளன. இவர்களுக்கு தேவையான பொழுதில், தேவையான நடவடிக்கை எடுக்க வேணடும். அப்போதுதான் நல்ல ஆட்சி; இவர்களோ எதுவும் செய்ய மாட்டார்கள்.
பொறுப்பற்ற சில ஊடகங்கள் இப்படி அனைத்து துறைகளையும் கட்டுப்படுத்த நினைப்பது, அழிவுப்பாதையில் தான் முடியும். நாட்டை ஒரு பதட்டத்தோடு வைத்து இருக்க வேண்டும் என்பதே ஒரு சில ஊடகங்களின் மறைமுக செயல்திட்டம் போல தோன்றுகிறது. அதற்கு பலிகடா ஆகாமால் தப்பிக்க வேண்டிய கடமை மக்களுக்கு உள்ளது.
பொள்ளாச்சி சம்பவங்களின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விட தன் மகன், மகள் குற்றவாளி அல்லது பாதிக்கப்பட்டவராக மாறிவிடக் கூடாது என்ற பொறுப்பு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வர வேண்டும். அதை சரியான முறையில் உருவாக்கினால், பொள்ளாட்சி சம்பவம் மட்டும் அல்ல, அது போல இனி வேறு எங்கேயும் நடக்காது என்பது நிச்சயம்.
அதே போல், அனைத்து சம்பவங்களையும் பரபரப்பாக்கி, அதில் டி.ஆர்.பி., ரேட்டிங் பார்க்கும் செயலை, சில ஊடகங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க குரல் கொடுப்பது அவசியம் தான். அதிலும் நடுநிலை தவறாமல் நடந்து கொள்வது மிக அவசியம்.