தமிழகம்

இந்தியாவுக்கே ஒளிவிளக்கை ஏற்றிய தமிழக சட்டமன்றம்..!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து நீட் தேர்வு தொடர்பான விவாதங்கள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன.

தேசிய அளவில், பொது மருத்துவம் பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் National Eligibility Entrance Test – என்ற தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 2013 மே 5ம் தேதி முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வை, முன்பு மத்திய இடைக்கல்வி வாரியம் நடத்தியது. கடந்த 2019ம் ஆண்டு முதல் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் கேட்கப்படும். ஒட்டு மொத்தமாக 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும்.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து அதிமுக அரசு நீண்ட காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வந்தார். 2016 செப்டம்பர் 22-ம்தேதிக்கு பின்னர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது, நீட் தேர்வு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. பின்னர் தமிழ் உள்பட 8 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2017-ல் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான கோரிக்கை வலுப்பெற்றது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் முக்கிய கோரிக்கையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பது அமைந்தது.

கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை நீட் தேர்வு சிதைக்கிறது. வசதி உடையவர்களால் மட்டுமே நீட் தேர்வுக்கு சிறந்த பயிற்சியை பெற்று மருத்துவர் ஆக முடியும். நீட் தேர்வுக்கு அனைத்து மாணவர்களுக்கும் சம பயிற்சி வழங்கப்படுவதில்லை. நீட் தேர்வு ஏழை கிராமப்புற மாணவர்ளுக்கு எதிராவும், பயிற்சி வகுப்பு செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது. இத்தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முறை சமூக நீதிக்கு எதிரானது.

தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் எழுதலாம் என்றபோதிலும், மாணவர்களின் பொருளாதார நிலைமை அதற்கு இடம் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீட் தேர்வில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்துவதால், அவர்களின் கல்வித் தரம் குறையும். கல்வி வணிகமாக்கலை நீட் தேர்வு முறை ஊக்குவிக்கிறது. நீட் தேர்வு மாநிலத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு பாரபட்சமானது என்று 2020 இல் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மாநில பாடத் திட்டத்தின் கீழ் மருத்துவ படிப்புக்கு தயாரான மாணவர்கள், நீட் பாடத்திட்டத்திற்கென தனியே தயாராக வேண்டியுள்ளது. 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், நீட் தேர்வின் தாக்கங்களை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாநில அளவிலான கணக்கெடுப்பை நடத்தி, ”தமிழகத்தில் மருத்துவ சேர்க்கையில் நீட் தாக்கம்” என்ற தலைப்பில் அறிக்கை தாக்கல் செய்தது.

இதன் தொடர்ச்சியாக, சட்டசபை கூட்டத் தொடரில், தமிழக சட்டமன்றத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரும் மசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம்தேதி நிறைவேற்றப்பட்டது. அத்துடன், மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவின் 165 பக்க அறிக்கை கடந்த செப்டம்பர் 20 அன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக கவர்னரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், மசோதாவை மறு பரிசீலனை செய்யக்கோரி கவர்னர் கடந்த 1-ம்தேதி சட்டப்பேரவை செயலருக்கு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அனைத்துக்கட்சி கூட்ட தீர்மானத்தின்படி சட்டமன்ற சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. 142 நாட்களுக்குப்பின் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 1ஆம் தேதி சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார். அதற்கு, கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்தது அல்ல என சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் நீட் தேர்வுக்கு எதிரான தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து நீட் விலக்கு மசோதா மீதான விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘’கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்ட, கல்வி உரிமையை மீட்டெடுக்க இன்று நாம் கூடியுள்ளோம். எனது பொதுவாழ்வில் மறக்கமுடியாத நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுகு மருத்துவக்கல்வியில் 7.5% இட ஒதுக்கீட்டை இந்த சட்டமன்றம்தான் உறுதி செய்துள்ளது. 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி சட்டப் பாதுகாப்பை பெற்றது இந்த சட்டமன்றம்தான். நுழைவுத்தேர்வு ஒழிப்புச்சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றது இந்த சட்டமன்றம்தான்.

நீட் என்ற சமூக அநீதியை அகற்ற இந்த சட்டமன்றத்தால்தான் முடியும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூக நீதியை நிலைநாட்டிட இந்த சட்டமன்றத்தில் கூடியுள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தால் உருவானதல்ல நீட் தேர்வு. நீட் தேர்வு விலக்கிற்காக மட்டுமல்ல; இந்த சட்டமன்றத்தின் இறையாண்மையை காக்க, சமூக நீதியை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவுக்கு தடுப்புச்சுவர் போடுகிறது. நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சிமையங்களுக்கு சாதகமானது. 2019இல் 4 பேர், 2020இல் 5 பேர், 2021இல் 15 பேர் நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக மத்திய அரசே கூறியுள்ளது. நீட் தேர்வில் வெற்றிபெற ஆள் மாறாட்ட நிகழ்வுகள்கூட நடந்துள்ளன. தேர்வர்களூக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக உதவுதல் உள்ளிட்ட முறைகேடுகள் நீட் தேர்வில் வழக்கமான நடைமுறையாக மாறியுள்ளது. தேர்வு எழுத மாற்று நபர்களை பயன்படுத்துவது, நீட் மதிப்பெண்களில் திருத்தம் உள்ளிட்ட நீட் தேர்வு மோசடிகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

நீட் தேர்வு என்பது மாணவர்களை கொல்லக்கூடியது; அது நீட் தேர்வு அல்ல; பலிபீடம். ஏழை, எளிய மாணவர்களை ஓரங்கட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட தேர்வே நீட் தேர்வு. மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைக்கும் நீட் தேர்வு என்பது ஒரு பலிபீடம் போன்றது. சில மாணவர்களை கல்லறைக்கும், சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா? நீட் விலக்கு மசோதாவை திருப்பியனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் சரியானவை அல்ல. சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கருத்துக்கள் கேட்டபிறகே ஏ.கே.ராஜன் குழு அறிக்கை அளித்துள்ளது.

நீட் தேர்வுக்கு முன் 90% இடங்களை மாநில பாடத்திட்ட மாணவர்கள் பெற்றுவந்தனர். தகுதி என்ற போர்வையில் உள்ள நீட் தேர்வு என்ற அறிவுத் தீண்டாமையை நாம் அகற்றவேண்டாமா? நீட் தேர்வு என்பது பணக்கார நீதியை பேசுகிறது; அரசியலமைப்பு என்பதே சட்டத்தின் நீதியை பேசுகிறது. அரசியலமைப்புச்சட்டம் கூறக்கூடிய சமத்துவத்திற்கு எதிரானது நீட் தேர்வு. மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பியதன் மூலம் சட்டமன்றத்தின் இறையாண்மை கேள்விக்குறியாகியுள்ளது. சட்டமன்றத்தின் தீர்மானத்தை ஆளுநர் நிறுத்திவைக்க முடியுமென்றால் இந்திய மாநிலங்களின் கதி என்ன? நியமன பதவியில் இருக்கும் ஆளுநர் மசோதாவை மதிக்காமல் திருப்பி அனுப்பியது மக்களாட்சிக்கு எதிரானது. ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டே நடந்துகொள்ள வேண்டும்.

சமூக நீதி மட்டுமல்ல; மாநில சுயாட்சியும் திராவிட இயக்கத்தின் கொள்கைதான். மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என இதே சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. நாடாளுமன்றத்துடன் முரண்படக்கூடிய சட்டத்தை நிறைவேற்றினல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கலாம். மீண்டும் நிறைவேற்றப்படும் நீட் விலக்கு மசோதாவை தாமதிக்காமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்புவார் என நம்புகிறேன். நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதன்மூலம் இந்தியாவுக்கே ஒளி விளக்கை ஏற்றிவைக்கிறோம்’’ என்று பேசினார்.

அதனைத் தொடர்ந்து நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இன்றே இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button