தமிழகம்

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? : அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யவும் அரசுக்கு ஆணையிட்டுள்ளது.
சென்னை நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளிலும், சென்னையை அடுத்த கௌரிவாக்கத்திலும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து, இளையராஜா, நாகேஸ்வர ராவ் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி, சம்பவ பகுதிகளில் நேரில் ஆய்வு நடத்திய வழக்கறிஞர் ஆணையர், தனது அறிக்கையை சமர்பித்தார்.
அதில், தினமும் 250 முதல் 300 லாரிகளில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதாகவும், தண்ணீரை எடுக்க விவசாயத்துக்காக வழங்கப்பட்ட இலவச மின்சாரம் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தாம் ஆய்வுக்காக சென்றபோது, பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் நடராஜ் மிரட்டியதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, சட்டவிரோதமாகவோ, வணிக பயன்பாட்டுக்காகவோ நிலத்தடி நீர் எடுக்கப்படவில்லை என அறிக்கை தாக்கல் செய்த ஆய்வாளருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
வழக்கின் விசாரணைக்கு ஆஜரான காவல்துறை இணை ஆணையர் மகேஸ்வரியிடம், தவறான அறிக்கை அளித்ததோடு, வழக்கறிஞர் ஆணையரை மிரட்டிய பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறீர்கள் என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பழவந்தாங்கல் ஆய்வாளருக்கு எதிராக துறைரீதியான விசாரணை நடத்தி, ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை எதிர்த்த வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவு மாநிலம் முழுவதற்கும் பொருந்தும் என்றும், நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவது தெரிகிறது என அறிக்கை தாக்கல் செய்த தாசில்தார், அந்த நபர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 378, 379 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் எடுத்ததாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அதிகாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை அதிகாரி உள்பட மூவருக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
சென்னையில் ஓடும் ஆறுகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை, உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இந்த உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஓடும் ஆறுகளான கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது. ஏப்ரல் 23ம் தேதி நேரில் ஆஜராகுமாறு, அப்போதைய தலைமைச் செயலாளருக்கும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் குழுவை நியமித்து, 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்திய அறிவியல் கழகம் (மிகிஷிணி), நீரி (ழிணிணிஸிமி) அமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ் ஆகிய நிறுவனங்களில் இருந்து, தலா ஒருவர் அடங்கிய குழு அமைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமலும், கூவம் நதியை சுத்தப்படுத்த 604 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதை கருத்தில் கொள்ளாமலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசுத்தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் ஏற்கனவே தீர்ப்பாயம் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதிகள், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தை நாட முடியாது என்றும் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகவும், தீர்ப்பாய உத்தரவை உறுதி செய்வதாகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தமிழக அரசின் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஸீ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button