தமிழகம்

உறவினர்களால் கைவிடப்பட்ட மூதாட்டியை மருத்துவ சிகிச்சையுடன் அரசு காப்பகத்தில் சேர்த்த கலெக்டர் வீரராகவராவ்

பரமக்குடியில்  பொதுச் சுகாதார ஆய்வின் போது உறவினர்களால் கைவிடப்பட்டுச் சாலையோரம் முகம் எல்லாம் ஈக்கள் மொய்த்த நிலையில் அங்கு தங்கியிருந்த மூதாட்டியை மீட்டுச் சிகிச்சைக்குப் பிறகு  அரசு காப்பகத்தில் சேர்க்க  அதிகாரிகளுக்கு  ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ்   உத்தரவிட்டது காண்போர் அனைவரையும் கண் கலங்கச் செய்தது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுப்புறச் சுகாதாரத் தூய்மைப் பணிகள்  குறித்து 4 மணிநேரத்திற்கு  மேலாக  வீடு வீடாகச் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நேரில் மேற்கொண்ட ஆய்வின் போது, சௌராஷ்டிரா  மேல் நிலைப்பள்ளிக்கு பின் புறம் உள்ள பஞ்சமுக ஆஞ்சனேயர்  கோவில் தெருவில் சுந்தர்நகர்  செல்லும் பாதையில், வன்னிமரத் தெருவில் சௌராஷ்ட்ரா சபைக்குப் பாத்தியப்பட்ட இடத்தில், ஒருவர் இறந்த பிறகு உயிரற்ற அந்த உடலை எடுத்துச்செல்லப் பயன்படுத்தும் ‘சொர்க்க ரதம்’ வாகன நிறுத்தும் இடத்தில் சாலையோரத்தில்  கடும் குளிரிலும், மழையிலும்  உறவினர்கள்  ஆதரவின்றி முகம் எல்லாம் ஈக்கள் மொய்த்த நிலையில் மூதாட்டி ஒருவரைக்  கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர்  அவரிடம் கனிவுடன்  விசாரணை  மேற்கொண்டார்.

உறவினர்கள் ஆதரவற்றுத் தனித்து விடப்பட்ட நிலையில் தவித்து வந்த  திருமதி. சங்கரம் என்ற வயது முதிர்ந்த அம்மையார்  இவருக்கு அமிர்தம் என்ற அமிர்தகள்ளி என்கிற ஒரு மகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

(நாம் தேடிச் சென்ற போது கண்டறிய முடியவில்லை)

ஆதரவின்றித் தனியே சிரமப்பட்டு வருவதை  அறிந்த கலெக்டர் வீரராகவராவ் சிறிது கலங்கித்தான் போனார். உடனடியாக மூதாட்டிக்கு உணவு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் கலெக்டர் . பிறகு அந்த அம்மையாரை  மீட்டு மருத்துவச் சிகிச்சை வழங்கி  உடனடியாக அரசு ஆதரவற்றோர்  இல்லத்தில் சேர்த்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டச் சமூகநல அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன்,   நகராட்சி உதவி பொறியாளர் திருமதி.லட்சுமி, வட்டாட்சியர்  பரமசிவன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் ‘முதியோர் உதவித் தொகை திட்டம்’

தமிழ்நாட்டில் வயது முதிர்வின் காரணமாக உழைத்து வருவாய் ஈட்டி வாழ முடியாமலும், உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாது துயரப்படும் முதியோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு உதவிடும் நோக்கில் 1.4.1962 முதல் “தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம்” என்ற ஒரு திட்டத்தினை அரசாணை எண்.73 நிதி (ஒய்வு) துறை நாள்:22.1.62ன் படி அரசு துவக்கியது. இத்திட்டம் துவக்கப்பட்ட போது மாதம் ரூ.20/- வீதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்த உதவி நிதி முன்னாள் தமிழக முதல்வர்களால் சீரமைக்கப்பட்டு படிப்படியாக உயர்த்தி, தற்போது மாதம் ரூ.1,000/-வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாத ஓய்வூதியத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவர்கள் போல ஏராளமான தாய்மார்கள்  இந் நாட்டில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோலாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button