கோயிலில் வெள்ளிக்கவசம் திருடிய அர்ச்சகர்கள்… : 7 ஆண்டாக நீடித்த வழக்கில் திடீர் திருப்பம்..!
மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமள ரங்கநாதர் திருக்கோயில் “தோளுக்கினியாள்” என்று அழைக்கப்படும் உற்சவ மூர்த்தியை தூக்கிச்செல்ல பயன்படுத்தப்படும் “படிச்சட்டம்” கடந்த 2014ம் ஆண்டு திடீரென காணாமல் போனது. இந்த “தோளுக்கினியாள்” என்ற “படிச்சட்டம்” மரத்தினால் செய்யப்பட்டு அதன் மேலே தொன்மையான கலை வேலைப்பாடுகளால் செய்யப்பட்ட வெள்ளி கவசத்தால் ஆனது.
கோவிலுக்குள்ளேயே பாதுகாப்பில் இருந்த உற்சவ மூர்த்தியின் படிச்சட்டம் காணாமல் போனது அப்போது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொன்மையான வெள்ளி “படிச்சட்டம்” காணாமல் போனது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என்பதை அறிந்த “படிச்சட்ட திருடர்கள்” சுமார் 15 கிலோ எடையிலான புதிய படிச்சட்டத்தை செய்து வந்து மீண்டும் கோவிலில் வைத்துள்ளனர். திருடர்கள் எப்படி கோவிலுக்குள் வந்து திருடிச் சென்றனர்? மீண்டும் எப்படி கோவிலுக்குள் படிச்சட்டத்தை வைத்தார்கள்? என பக்தர்களுக்கு இடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் மயிலடுதுறை போலீசாரின் இந்த விசாரணை பின் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் சென்னை கே.கே நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் இந்த சம்பவம் குறித்து உண்மை தன்மையை அறியவும், குற்றவாளிகள் யார்? என்பதை கண்டறியவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார்.
2014 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மீண்டும் தூசு தட்டி கையில் எடுத்தனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள். கோவிலில் நிர்வாகிகள், குருக்கள் என பலரிடம் விசாரணை மேற்கொண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அக்கோயிலின் தலைமை குருக்களாக பணிபுரிந்து வரும் ஸ்ரீநிவாச ரெங்க பட்டர் மற்றும் கோவில் குருக்கள் முரளிதர தீட்சிதர் ஆகியோர் மீது சந்தேகம் எழுந்தது.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இரண்டு நபர்கள் தான் “தோளுக்கினியாள்” என்ற “படிச்சட்டத்தை” திருடியதும் தெரியவந்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை கையில் எடுத்ததும் பயந்துபோன ஸ்ரீநிவாச ரெங்க பட்டர் மற்றும் முரளிதர தீட்சிதர் ஆகிய இருவரும் போலீசிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அதே போன்று ஒரு “படிச்சட்டத்தை” வாங்கி வைக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் மயிலாடுதுறையில் உள்ள பிரபல நகைக்கடையில் கோவிலுக்கு காணிக்கையாக “படிச்சட்டம்” செலுத்துவதாக கூறி 15 கிலோ எடை கொண்ட வெள்ளி படிச்சட்டத்தை ஆர்டர் கொடுத்து அதை பழையது போல் மாற்றி யாருக்கும் தெரியாமல் கோவிலில் மீண்டும் வைத்தது தெரியவந்தது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீநிவாச ரெங்க பட்டர் மற்றும் கோவில் குருக்கள் முரளிதர தீட்சிதர் ஆகிய இருவரும் கோவிலுக்கு தேவையான தொன்மையான பொருட்கள் வாங்க வேண்டுமென பலரிடம் நிதி வாங்கி மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– குண்டூசி