பல்லடத்தில் “திமுக பெண் கவுன்சிலர்” கோயிலுக்குள் நுழைய தடை, போலீசார் விசாரணை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 8 வது வார்டு பச்சாபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. மேலும் 100 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் அரங்காவலராக அய்யாசாமியும், செயலாளராக ரங்கராஜும் உள்ளனர். இந்நிலையில் ஆடி மாதம் இக்கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் வெகு விமர்சையாக சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெறுவது வழக்கம். இதனிடையே பல்லடம் நகராட்சி 8 வது வார்டு திமுக கவுன்சிலர் சுகன்யா ஜெகதீஸ் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாகாளியம்மனுக்கு அன்னதானமும் சிறப்பு பூஜையும் தனது குடும்பத்தார் சார்பில் நடத்த கடந்த 45 தினங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் கோயில் வரவுசெலவு குறித்து அப்பகுதி பொதுமக்களில் சிலருக்கும் கோயில் நிர்வாகத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோயில் பிரச்சனைக்கும் ஊரில் மக்கள் எதிர்ப்பை மீறி கவுன்சிலர் சுகன்யா மின்மயானம் அமைய ஆதரவு தெரிவித்ததாக பொதுமக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பியதோடு கோயிலுக்குள் நுழைய கோயில் நிர்வாகத்தினர் தடைவிதித்ததோடு, அன்னதானம் வழங்கவும் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாகாளியம்மன் கோயிலுக்குள் தன்னை நுழைய தடைவிதித்ததால் அதிர்ச்சி அடைந்த கவின்சிலர் சுகன்யா ஜெகதீஸ் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆளும்கட்சி பெண் கவுன்சிலர் கோயிலுக்குள் நுழைய தடைவித்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.