தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூபாய் ஒன்றரை கோடி மோசடி : அதிகாரிகள் ஆய்வு
பரமக்குடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கிளியூர் கிளையில் போலி நகைகளை வைத்து ரூபாய் ஒன்றரை கோடி மோசடி செய்தது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து தமிழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆய்வு செய்து வருகிறது.
இதனை அடுத்து ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் கடன் பெற்றவர்களின் விவரங்கள், கோப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பி.கொடிக்குளம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் அதன் கிளை கிளியூர் கிராமத்திலும் செயல்பட்டு வருகிறது.
கிளியூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் கோப்புகளை ஆய்வு செய்தபோது 84 நபர்களின் பெயரில் போலி நகைகளை வைத்து கடன் பெற்றாக ஆவணங்களை தயாரித்த மோசடி சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் கிளியூர் கிளையில் கடந்த பத்தாண்டுகளில் கடன் பெற்றவர்களின் விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் சுமார் 84 நபர்களின் போலி நகைகளை வைத்து ரூபாய் ஒன்றரை கோடி வரை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பி.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கார்மேகம், செயலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோரிடம் மாவட்ட பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பரமக்குடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகளை வைத்து ரூபாய் ஒன்றரை மோசடி நடைபெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.—–