அதிமுக ஆட்சியில் கால்வாய்கள் தூர்வாராததால், விவசாயம் பாதிப்பு..!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பரமக்குடி அருகே வைகையாற்றில் கச்சாத்தநல்லூர் என்ற இடத்தில் அமைந்துள்ள தடுப்பணையில் இருந்து வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது, இடது பிரதான கால்வாய் எமனேஸ்வரம், காந்திநகர், குமாரக்குறிச்சி, நயினார்கோவில் வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய் சென்றடைகிறது. சுமார் 42 கிலோமீட்டர் தூரம் உள்ள கால்வாயை நம்பி 36 கண்மாய்கள் உள்ளன. இந்த கால்வாய் தண்ணீரை பயன்படுத்தி சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த கால்வாய் தூர்வாரபடாததால் சீமை கருவேல மரங்கள் 20 அடிக்கு மேல் வளர்ந்து உள்ளது. இதனால் கால்வாய் முழுவதும் புதர்மண்டி சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாகவும், குப்பை கொட்டும் நிலமாகவும் காட்சி அளிக்கிறது. கால்வாயின் கரையை மறைக்கும் அளவிற்கு கால்வாயில் சுமார் 20 அடிக்கு மேல் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.
மேலும் கால்வாயில் உள்ள சட்டர்கள் சேதம் அடைந்து பலவீனமாக உள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. எனவே கால்வாயை நம்பி உள்ள 36 கிராம விவசாயிகள் விவசாயம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் கண்மாய்கள் குடிமராமத்து என வீணாக பணம் செலவிடப்பட்ட நிலையில் கண்மாய்களுக்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாய்கள் முற்றிலும் தூர்வாரப்படவில்லை.
10 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவினரிடம் கால்வாயை தூர்வாரக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் இப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது வைகை அணையில் 70 அடி நிரம்பியுள்ள நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் துவங்கும் முன் இக்கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.