“வீரன் சாவதே இல்லை.. கோழை வாழ்வதே இல்லை” : கலைஞர்
‘உள்ளத்தில் அழியாத ஓவியமாக கிடைத்துவிட்ட ‘என் உயரினும் மேலான உடன் பிறப்புகளுக்கு வணக்கம்.’ எனது திமுக தொண்டர்கள் மத்தியில் பேசத் தொடங்கும் கருணாநிதி பழைய தஞ்சை மாவட்டம் திருவாரூர் அருகே திருக்குவளை என்னும் ஊரில் பிறந்து, தமிழகத்தை ஐந்து முறை ஆட்சி செய்தவர். அவர் போட்டியிட்ட 13 சட்டமன்ற தேர்தல்களிலும் தோல்வியே சந்திக்காதவர். கலைஞருக்கு போதிய பணமும், படிப்பும் இல்லாத போது தனது பேச்சுத் திறமையாலும், எழுத்தாற்றலாலும் தான் அரசியலுக்குள் நுழைந்தார்.
திமுக&வில் அறிஞர் அண்ணாவும், மதியழகனும் அப்போது முதுகலை பட்டம் பெற்றவர்கள். ஆனால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய கலைஞர், இருவரை காட்டிலும் அதிக நூல்களை எழுதியுள்ளார். தனது 17 வயதிலேயே இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி போராடி மாணவர் மன்றத்தை துவக்கினார். 1940களில் அண்ணாவுடன் பழக்கமானவர். பிறகு பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவை உருவாக்கிய போது அண்ணாவுக்கு நெருக்கமான தளபதிகளுள் ஒருவரானார். பிறகு கட்சியின் முக்கிய சக்தியாக திகழ்ந்தார். 1967&ல் திமுக ஆட்சி அமைந்த போது அண்ணாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்.
1969-ல் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தின் முதலமைச்சாராக பதவியேற்றார். அப்போது தொலை நோக்கு பார்வையோடு, தமிழ்நாட்டை தொழில்துறையில் முன்னேற்ற வேண்டும் என விரும்பினார். அப்போது சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மட்டும் இயங்கி வந்த பொது விநியோகத் திட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி தமிழகத்தில் பட்டினிச் சாவு இல்லாத சூழலை உருவாக்கினார். தேசிய அரசியலில் கணிசமான பங்களிப்பை அளித்திருந்தாலும், தேசிய அரசியலுக்குச் செல்ல அவர் ஒருபோதும் விரும்பியது கிடையாது.
கலைஞருக்கு பிரதமர் ஆவதற்கு வாய்ப்பு கிடைத்தும், அவர் அடுத்தவர்களையே தேர்வு செய்தார். பிரதமர் பதவி குறித்து அவரிடம் கேட்ட போது, எனது உயரம் எனக்குத் தெரியும் என வெளிப்படையாக பல தருணங்களில் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பூர்வ வேட்பாளருக்கு எதிராக தனது சொந்த வேட்பாளரை 1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திரகாந்தி நிறுத்தினார். அப்போது கலைஞர் இந்திரகாந்திக்கு ஆதரவளித்தார். மத்தியில் ஆட்சி நிலையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினாலும் ஒரே இடத்தில் அதிகாரம் குவிக்கப்படுவதை கருணாநிதி எதிர்த்தார்.
ராஜீவ்காந்தியிடம் இருந்து விலகி வந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டனி அரசு வி.பி.சிங் தலைமையில் ஆட்சி அமைக்க, கலைஞரும் முக்கிய பங்காற்றினார். அப்போது தமிழக நலனுக்காக காவிரி நடுவர் மன்றம் அமைப்பது, இலங்கையில் இருந்து இந்தியா ராணுவ வீரர்களை திரும்ப அழைப்பது, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக இடஒதுக்கீடு வழங்க மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துதல் ஆகியவற்றை கலைஞர் அப்போது உறுதி செய்தார். வி.பி.சிங் பதவி விலகிய பிறகும் தேவகௌடா, ஐ.கே.குஜரால் ஆகியோர் பிரதமராக கலைஞர் முக்கிய பங்காற்றினார்.
மதவாத சக்திகளுக்கு எதிராக போராடுபவர் என அறியப்பட்ட கலைஞர் 1999-ல் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்து, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆனால் ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுக்க மாட்டோம் என்ற உத்திரவாதத்தை பா.ஜ.க.&விடம் வாங்கிக் கொண்டார். தங்கள் அரசின் முக்கிய நோக்கமாக இருக்கும் ஒன்றை கையிலெடுக்க மாட்டோம் என்று தேசிய கட்சி மாநில கட்சியிடம் உத்திரவாதம் அளிப்பது வழக்கத்திற்கு மாறானது.
ராமர் எனும் கடவுள் இருந்ததே இல்லை. அது ஒரு புராணக்கதை மட்டுமே என கூறி கலைஞர் பா.ஜ.க. மற்றும் அவர்களை ஆதரிக்கும் வலதுசாரி அமைப்பின் கோபத்துக்கு உள்ளானார். முதலமைச்சர் என்ற உயரிய பொறுப்பில் இருக்கும் கலைஞர் அவ்வாறு கூறியிருக்க கூடாது என அத்வானி அப்போது கண்டித்தார். ஆனால் கலைஞர் தனது கருத்துக்கு ஆதரவாக நேரு கூறியதை சுட்டிக்காட்டினார்.
திராவிடர்கள் மீது தங்கள் மேலாதிக்கத்தை செலுத்துவதற்காகவே இட்டுக் கட்டப்பட்ட கதையே ராமாயணம் என்று கூறும் ஜவஹர்லால் நேருவை விடவும் ராமரை காக்க வருபவர்கள் ஒன்றும் பெரியவர்கள் அல்ல என்று கலைஞர் அப்போது கூறினார்.
2001-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பேசிய போது தான் ஏன் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தேன் என்று விளக்கமாக பேசினார். வாஜ்பாய் உடனான நட்பை வெல்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட், திரினாமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இருக்கும் நண்பர்களை நான் இழக்க வேண்டி இருக்கும் என்றால் அதற்கு காரணம் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட நாங்கள் 1985-ல் நாங்கள் ஒன்றாக போராடிய அவசர நிலை நாட்களில் இருந்தே நாங்கள் நட்பில் உள்ளோம் என்றார் கலைஞர். எனக்கு பா.ஜ.க. என்பது முக்கியமல்ல. அதன் தலைமை பொறுப்பில் யார் உள்ளார்கள் என்பது முக்கியம் என்றார். 2003-ல் திமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது. வாஜ்பாயை போல் அத்வானி தமிழர் நலனுக்கு அனுசரணையாக இல்லை என்று கலைஞர் அப்போது கூறினார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பங்கேற்று முக்கிய பங்காற்றினார். சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகிய இருவரும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் அறிவுரை வேண்டி கலைஞரை நாடியுள்ளதாக பலமுறை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். கலைஞர் அரை நூற்றாண்டு காலமாக பொது வாழ்வில் உள்ளார். அவரது அனுபவமும், அறிவும் நாட்டை நிர்வாகிப்பதில் எங்களுக்கு உதவுவது எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்ட வசமானது என்று மன்மோகன் சிங் கூறீனார்.
2014&ல் நரேந்திர மோடி பதவி ஏற்ற போது, உள்ளார்ந்த நுண்ணறிவு, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் உயர் பொறுப்பை அடைந்துள்ளீர்கள் என்று கூறினார் கலைஞர். 1996 முதல் 2014 வரை (அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த, 13 மாதங்கள் தவிர) திமுக மத்திய அரசில் அங்கம் வகிக்க கலைஞரின் அரசியல் நுட்பம் காரணமாக இருந்தது. மாநில அரசு அதிக தன்னாட்சி அதிகாரம் பெறுவதிலும், மத்திய, மாநில அரசுகளின் உறவை வரவேற்பதிலும் கலைஞர் முக்கிய் பங்காற்றினார்.
1969&ல் ராஜமன்னார் கமிட்டி அமைத்து அதில் முக்கியமான ஒன்று. மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஒன்றை அமைக்கவும், மத்திய அரசு, மாநில அரசை கலைக்க அதிகாரம் வழங்கும் இந்திய அரசியல் அமைப்பான பிரிவு 365ஐ முடிக்கவும் அந்த கமிட்டி பரிந்துரை செய்தது. மத்திய அரசு அந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், மாநில சுயாட்சியை விட்டுக் கொடுக்காதவராகவே கலைஞர் விளங்கினார். சமூகத்திற்கு கலைஞர் ஆற்றிய பங்களிப்பு போற்றப்பட்டது.
அரசியலில் பல மன்னர்களை உருவாக்கியது மட்டுமில்லாதது திரைத்துறையிலும் கலைஞர் ஒரு உச்ச நட்சத்திரமாக பார்க்கப்பட்டார். 1949&1950&ல் கலைஞர் கதை, வசனம் எழுதிய மந்திரகுமாரி படம் எம்.ஜி.ஆரை வெள்ளித் திரையில் நட்சத்திரமாக்கியது. பராசக்தி படத்திற்கு கதை, வசனம் எழுதி சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகிய இருவரையும் நட்சத்திரங்களாக்கினார். 1954&ல் வெற்றி படமான மனோகரா படத்திற்கு கதை, வசனம் எழுதினார். அந்தப் படத்திற்கு எழுதிய திரைக்கதையை புத்தகமாக வெளியிட்டு கிடைத்த பணத்தில் தனது முதல் குழந்தை என்று அவர் கூறிய கட்சி பத்திரிக்கையான முரசொலிக்கு அச்சகம் ஒன்றை வாங்கினார்.
கலைஞரின் இறப்புச் செய்தியை சுமந்து கொண்டு முரசொலி இதழும், அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்படும் போது அவருக்கு அருகிலேயே வைக்கப்பட்டிருந்தது. மரணத்திற்குப் பிறகும் தான் இறுதியாக ஓய்வு எடுக்கும் இடத்திற்காக தான் போராட வேண்டும் என கலைஞர் எதிர்பார்த்திருக்க மாட்டார். தனது தொண்டர்களுக்கு முரசொலியில் கலைஞர் எழுதுவது “வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை”
– சூரிகா