சினிமா

செஞ்சிக் கோட்டையில் வெற்றிக்கொடி பறக்கும் – பட விழாவில் இயக்குனர் பேரரசு

சினிமா தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளே இழுத்துக் கொள்ளும், என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் ‘செஞ்சி’. தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து வளர்ச்சியடைந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்று குடும்பம், பிள்ளைகள் என்று  பொருளாதார அமைதிக்கான அனைத்தையும் முடித்துவிட்டுத் தனது இளமைக் காலத்துக் கனவான சினிமா முயற்சியில் இறங்கிய கணேஷ் சந்திரசேகர் என்பவர் ஜி.சி என்கிற பெயரில் இயக்கி, நடித்து ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம்  ‘செஞ்சி’. இதை  வழக்கமான வணிக சினிமா சூத்திரங்களுக்கு  உட்படாத வகையில் தனது விருப்பத்துக் கற்பனையைக் காட்சிகளாக்கி ஒரு கனவுப் படமாக  ‘செஞ்சி’ என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார்.

இப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகிய திரையுலகப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.

இந்த விழாவில் இயக்குநரும் தயாரிப்பாளருமான கணேஷ் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார். அவர் பேசும்போது, ”எனது மனதில்  சினிமா கனவு இருந்தது. அந்தக் கனவை நிறைவேற்ற நான் எனது வாழ்க்கைக் கடமைகளை நிறைவேற்றிய பின் குடும்பத்தினர், மற்றும் பிள்ளைகளின் ஆதரவோடும் ஊக்கத்தோடும் இதில் இறங்கினேன். அப்படித்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்திற்கு படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய இரண்டு வருடம் நாங்கள் தேடி அலைந்தோம். அந்த அளவிற்கு ஒரு தேடலுடன் இதில் ஈடுபட்டோம். இதுவரை கேமரா போகாத பல இடங்களில் இந்தப் படத்திற்காக நாங்கள் பயணப்பட்டு படப் பதிவு செய்துள்ளோம்.   காலை 6 மணிக்கு கிளம்பி 2 மணி நேரம் மலையில் காடுகளில் என்று நடந்து 8 மணிக்குச் சென்றடைந்து, வனத்துறை அனுமதி கொடுத்த நேரமான காலை 11 மணி முதல் 3 மணி வரை படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். நாங்கள் போன சில நிமிடங்களில் யானை போன்ற வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும்  சூழலில்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். எங்களுக்கு வனத்துறை மிகவும் பாதுகாப்பாகவும், உதவியாகவும் இருந்தது. காட்டில் மட்டுமல்ல கேரளாவில் சித்ராஞ்சலி ஸ்டுடியோவிலும் எடுத்திருக்கிறோம். பாண்டிச்சேரி, மலேசியா என்றும் பயணம் செய்து எடுத்துள்ளோம்

சினிமா நாடு, மொழி ஆகியவற்றுக்காக மட்டும்  போராட வேண்டும் என்பதில்லை. இந்தப் பூமிக்காகவும் போராட வேண்டும் என்கிற கருத்து இதில் சொல்லப்பட்டுள்ளது. சினிமா என்பதை இரண்டாவது கல்வி என்று நான் நினைக்கிறேன். சினிமாவில் ஒரு சிறு விஷயம்  வெளிப்படுத்தினாலும் கூட அது மக்களிடம் போய்ச் சேர்ந்துவிடும்
சினிமா மூலம் சொல்லப்படும் கருத்துகள் மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக இதை எடுத்திருக்கிறேன்.  .

இதில் யார் நடிப்பது  என்று பார்த்த போது பிரபல கதாநாயகர்கள் என்றால் நிபந்தனைகள் போடுவார்கள். அது சரிப்பட்டு வராது என்று நினைத்தேன். தயாரிக்கும் தயாரிப்பாளர் யார் என்றால் அதுவும் அப்படித்தான், கட்டுப்பாடுகள் இருக்கும் என்று நானே நடித்து இயக்கித் தயாரித்தேன்.
நான் சினிமா எடுக்கும்  விஷயத்தை அப்படியே குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லிவிட்டு அவர்கள் ஆதரவுடன் இந்தக் களத்தில் இறங்கினேன். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. இதில் நடித்திருக்கும் ரஷ்ய நடிகை கெசன்யா இரண்டு மாதம் வந்து தங்கியிருந்து அழகாக நடித்துக் கொடுத்தார்

இது வழக்கமான சினிமா போலிருக்காது. ஆக்சன் சென்டிமென்ட், போன்ற வியாபார நோக்கத்தில் இருக்காது. இவற்றையும் தாண்டி சினிமாவில் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் ஒன்றை எடுத்துக்கொண்டு படமாக்கி இருக்கிறேன்.அதே சமயம் மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதையை வித்தியாசமான களத்தில் உருவாக்கி இருக்கிறோம் என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது போது, சினிமா எத்தனையோ பேரைப் பார்த்து இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு புத்திசாலியை, கெட்டிக்காரத்தனம் உள்ளவரைப் பார்த்ததில்லை. சினிமா கனவோடு வந்து திருமணமாகாமல் சிரமப்பட்டுப் போராடிக் கொண்டிருக்கும் பலரையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர் சிரமப்பட்டு சம்பாதித்துக் குடும்பத்தின் கடமைகளை நிறைவேற்றிவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார். இது புதிதாக  இருக்கிறது.  இப்படியும் சினிமாத்துறைக்கு வரலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

செஞ்சி என்பது என்னுடைய தலைப்பு. அதைப் புதுப்பிக்காததால் இவர் எடுத்துக் கொண்டு விட்டார். ஒரு படம் எப்படி இருக்கும் என்பதை அதன் தலைப்பைப் பார்த்தாலே அதில் உள்ள வடிவமைப்பைப் பார்த்தாலே தெரிந்து விடும். இவர் செஞ்சி என்பதைச் சாதாரணமாக அந்தப் பெயரைப் போடாமல் அதில் மெனக்கட்டு செய்துள்ளார். நானும் ஊர்ப் பெயர்களில் படங்கள் எடுத்துள்ளேன்.

திருப்பாச்சியில்  பழுக்கக் காய்ச்சிய  அரிவாளை அந்தத் தலைப்பில் வைத்திருப்பேன். சிவகாசியில் பட்டாசை வைத்து வடிவமைத்திருப்பேன். திருண்ணாமலையில் லிங்கங்களாகக் காட்டி இருப்பேன். இவர் தலைப்பில் செஞ்சிக் கோட்டையை நினைவூட்டும்படி  வடிவமைத்துள்ளார்.

செஞ்சி என்றவுடன் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று ஞாபகங்கள் தான். செஞ்சியின் அரசன் தேசிங்கு ராஜா கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். அவரை வீழ்த்த முடியாத போது அவர் சவாரி செய்த குதிரையை வீழ்த்தினால் அவரைக் கொன்று விடலாம் என்று எதிரிகள் நினைத்தார்கள். எனவே அவரது  குதிரை நீலவேணியை வெட்டிச் சாய்த்தார்கள். பிறகு ராஜாவைக் கொன்றார்கள். செஞ்சியில் மன்னருக்குச் சமாதி இருப்பது போலவே அவரது நண்பன் அகமத்கானுக்கும் அவர் சவாரி செய்த குதிரையான நிலவேணிக்கும் சமாதி உள்ளது. இதன்மூலம் விலங்குகளுக்கு வரலாற்றில் உள்ள இடத்தை நம்மால் அறிய முடியும். இந்தப் படத்தை அங்கே எடுத்துள்ளார்கள். அந்தக் காட்சிகள் நன்றாக உள்ளன. இந்தப் படம் வெற்றிபெற்று  செஞ்சியில் வெற்றிக் கொடியும் பறக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button