தொழிலாளர்களின் நலனா? தலைவர் பதவியா? : செல்வமணியின் முடிவு என்ன…?
தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. திரையுலகில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் இணைந்து ஒரு மனதோடு செயல்பட்டால் தான் திரைப்படம் திரைக்கு வரும் என்ற நிலையில், இதுநாள் வரையும் திரைத்துறை முதலாளிகளும் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உள்ள இணைக்கப்பட்ட 24 சங்கங்களின் உறுப்பினர்களும் ஒரு மனதோடு செயல்பட்டு திரைப்பட படப்பிடிப்புகள் மற்றும் இதர பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்திற்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதனை அறிக்கையாக வெளியிட்டது.
இந்த சம்பவம் திரைத்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. காலங்காலமாக சினிமாவில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வேறு தொழில் தெரியாது. சினிமாவில் பணியாற்றி அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்த தொழிலாளர்கள் இனி என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கதியில் அந்தந்த சங்கங்களுக்கு படையெடுத்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்று விசாரிக்கத் தொடங்கினர்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினராக உள்ள தயாரிப்பாளர்கள் மைக்கேல் ராயப்பன், திருப்பதி சகோதரர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி, மேலும் ஒருவர் உள்ளிட்ட தயாரிப்பாளர்களிடம் நடிகர் சிம்பு குடும்பத்தினர் சில கோடிகளை முன்பணமாக பெற்றுக்கொண்டு படம் நடித்துக் கொடுக்காமல் நடிகர் சிம்பு காலம் தாழ்த்தி வருவதால் சிம்பு குடும்பத்தினர் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே சிம்புவின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதுவரை சிம்புவுக்கு தொழிலாளர்கள் சம்மேளனமும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி முன்னிலையில் முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் வெந்து தணியும் காடு என்ற படத்தின் படப்பிடிப்பை நடத்த தொழிற்சங்கத்தின் தலைவர் செல்வமணி அந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசனிடம் பல உதவிகளை பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியதால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கோபமடைந்துள்ளனர்.
முதல்நாள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சங்க நிர்வாகிகள், சிம்புவின் தாயார் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையில் செல்வமணியும் கலந்து கொண்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவுக்கு சம்மதத்தை தெரிவித்து மறுநாள் ஐசரி கணேஷ் தனது கல்லூரி மூலம் பல உதவிகள் செய்வதால் சிம்புவின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக ஆர்.கே.செல்வமணி கூறினார்.
உடனடியாக தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செயற்குழுவை கூட்டி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தினரோடு இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தீர்மானம் நிறைவேற்றினர். அதோடு இனிமேல் படப்பிடிப்புகள் நடத்தும் தயாரிப்பாளர்கள் யாரை வேண்டுமானாலும் அதாவது தாங்கள் விரும்பும் நபர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவெடுத்துள்ளது.
தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள் அதாவது ஆர்.கே.செல்வமணி தலைமையிலான நிர்வாகிகள் அனைவரும் பதவி விலகி புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் வரை இதேநிலை நீடிக்கும் எனவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். செல்வமணியின் சுயநலத்திற்காக ஒட்டுமொத்த தொழிலாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். வெந்து தணியும் காடு படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷ் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, தேர்தல் முடிவுகளை வெளியிட விடாமல் நீதிமன்றம் மூலம் தடுத்து வருகிறார். இதனால்தான் நடிகர் சங்கம் செயல்படாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் இவர் மீது உள்ளது.
ஆர்.கே.செல்வமணி தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு தலைவராக வந்ததிலிருந்து சம்மேளனத்தின் நிர்வாகத்தில் வரவு, செலவு கணக்குகளில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருவதாக பல்வேறு தரப்பினரும் கூறிவருகிறார்கள். இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும் செல்வமணியின் பதவிக்கு நெருக்கடி கொடுத்துள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் செல்வமணி ராஜினாமா செய்து கொண்டு தானாக வெளியேறுவதுதான் அவருக்கு நல்லது என்று அவரது நலம் விரும்பிகளே பேசத்தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்மேளனத்தின் பொதுக்குழுவை கூட்டி தொழிலாளர்களின் சம்பள பேச்சு வார்த்தைக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சம்மேளன நிர்வாகிகளை அழைத்து பேசவில்லை என்றால் சில தினங்களில் சம்மேளன நிர்வாகமே தொழிலாளர்களின் உயர்த்தப்பட்ட சம்பள பட்டியலை அறிவிக்கும என்று முடிவு செய்திருக்கிறார் ஆர்.கே.செல்வமணி. தற்போது நடைபெற்று வரும் சினிமா படப்பிடிப்புகளில் தயாரிப்பாளர்களின் விருப்பப்படி அவர்கள் விரும்பும் எண்ணிக்கையிலான நபர்களை வைத்துத்தான் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. ஆனால் ஆர்.கே.செல்வமணி எதுவுமே நடக்காதது போல் சம்பள பேச்சுவார்த்தைக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அழைக்க வேண்டும் என கடிதமும் அனுப்பியிருக்கிறார். ஆனால் செல்வமணியின் கடிதத்தை யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் ஆட்சியாளர்களோடு நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொண்டு திமுக ஆட்சியில் சினிமா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் ஜெயலலிதா பெயரில் கட்டிடம் திறப்புவிழா செய்வதாக முதல்வர் பழனிச்சாமியிடம் சில கோடிகளை பெற்றுக்கொண்டு, ஏற்கனவே சம்மேளனத்தின் பழைய நிர்வாகம் கட்டிய கட்டிடத்தை புதுப்பித்து திறப்பு விழாவும் செய்தார் செல்வமணி. கொரோனா காலத்தில் நிவாரண பொருட்கள் வழங்கியதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என்பது போன்ற பல புகார்கள் ஆட்சியாளர்களிடமும், அதிகாரிகளிடமும் சினிமா தொழிலாளர்களும், பிரபலங்களும், முன்னாள் நிர்வாகிகளும் கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.
தொழிலாளர்களின் தலைவராக தன்னை அடிக்கடி மீடியாக்களில் விளம்பரப்படுத்திக் கொள்ளும் செல்வமணி, உண்மையாக தொழிலாளர்களை நேசிப்பவராக இருந்தால் தொழிலாளர்களின் நலனுக்காக தனது பதவியை ராஜினாமா செய்திருப்பார். ஆனால் செல்வமணி ஒரு தயாரிப்பாளர் என்பதால் அவரது மனதில் இருப்பது முதலாளி என்ற கர்வம் மட்டுமே என்கிறார்கள் சில சங்க நிர்வாகிகள். செல்வமணியின் நோக்கமே தொழிலாளர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதுதான். இதற்கு முன் சில வருடங்களுக்கு முன் சம்மேளன தொழிலாளர்களுக்கு எதிராக படைப்பாளிகள் என்ற அமைப்பை தொடங்கி சினிமா தொழிலாளர்களையும், சினிமாவையும் பல மாதங்கள் முடக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போதைய சூழ்நிலையில் ஆர்.கே.செல்வமணி அமைதியாக தானாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்தால் அவரது பெயருக்கும் புகழுக்கும் தமிழக மக்கள் மத்தியில் களங்கம் ஏற்படாமல் இருக்கும். பிடிவாதம் பிடித்தால் இவர் மீது கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு புகார்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார். செல்வமணி சம்மேளனத்தின் தலைவராக இருக்கும் வரை சினிமா தொழிலாளர்களுக்கும் சினிமாவுக்கும் தமிழக அரசு எந்தவித சலுகைகளையும் உதவிகளையும் வழங்காது என்பதே தற்போது கோட்டை வட்டாரத்தில் பேசப்படுவதாக தெரிய வருகிறது.
தொழிலாளர்களின் நலனா? தலைவர் பதவியா? எது முக்கியம் என்பதை செல்வமணி தான் முடிவு செய்ய வேண்டும்.
– சூரியன்