ராதாரவி சர்ச்சை பேச்சு: விசாகா கமிட்டி அமைக்க நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? : நயன்தாரா கேள்வி
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’. இந்த படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கிறது. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர், நடிகை நயன்தாரா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. மேலும், இயக்குனர் கரு.பழனியப்பன், ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட சில திரையுலகப் பிரபலங்களே கலந்துகொண்டார்கள்.
இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அப்போது ராதாரவி பேசியது: “ எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். நயன்தாரா நல்ல நடிகை, அவர் இவ்வளவு நாட்கள் திரையுலகில் நிலைப்பதே மிகவும் பெரிய விஷயம். ஏனென்றால் அவரைப் பற்றி வராத செய்திகளே கிடையாது. அதெல்லாம் தாண்டி அவர் நிற்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை நான்கு நாட்கள் மட்டுமே நியாபகம் வைத்திருப்பார்கள். பின்னர் விட்டுவிடுவார்கள்.
நயன்தாராவே ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார், இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார். இப்போதெல்லாம் யாரு வேண்டுமானாலும் சீதாவாக நடித்துவிட முடிகிறது. முன்பு சீதாவாக நடிக்க வேண்டும் என்றால் கே.ஆர். விஜயாவைதான் தேடுவார்கள். அவரை பார்த்தால் கும்பிடத் தோன்றும். இப்போதெல்லாம் பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்’ என்று ராதாரவி பேசினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் விக்னேஷ்சிவன், ’’ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அருவருப்பானவை. தன் மீதான கவனத்தை ஈர்க்கவே ராதாரவி இப்படி செய்கிறார். மூளையற்றவர். அந்த குப்பைக் கருத்தைக் கேட்டு குழுமியிருந்தவர்கள் சிரித்து கைதட்டியது இன்னும் கவலையான விஷயம்.
இதுதான் ஒரு படத்தை விளம்பரம் செய்யும் விதம் என்றால் இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகுவதே நல்லது. என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இது ஒரு பரிதாபமான நிலை’’ என்று கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்.
ராதாரவியின் பேச்சு தொடர்பாக கருத்து கூறிய அவரின் சகோதரியும் நடிகையுமான ராதிகா சரத்குமார், ராதாரவியை சந்தித்தேன். அவர் பேசியது முற்றிலும் தவறு என்று சொன்னேன் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், ‘’பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்‘’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நயன்தாரா குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்த நடிகர் ராதாரவி, என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதவிர நடிகர் சங்கம் சார்பிலும் ராதாரவிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கியதற்காக மு.க.ஸ்டாலினுக்கு அவர் நன்றிகளை தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராதாரவியை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பெண்களை மிகவும் இழிவாக பேசுபவர்களை பற்றி மிகவும் வருந்துகிறேன். மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி விசாகா கமிட்டி அமைக்க நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனதால், ராதாரவி கீழ்த்தரமாக பேசி பிறர் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார் என்றும் நயன்தாரா கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், கடவுள் பாக்கியத்தில் திரைத்துறையில் வெற்றிகரமாக இருக்கும் தன் மீது இப்படி விமர்சனங்களை முன்வைப்பது வருத்தம் அளிப்பதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.