என்னது? வயிற்றைக் கிழித்து குழந்தை கடத்தலா…!.? “ஜோதி” திரை விமர்சனம்
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கிருஷ்ண பரமாத்மா இயக்கியிருக்கும் திரைப்படம் “ஜோதி”. இந்தப் படத்தில் ஒவ்வொருவரும் குழந்தைப்பேறு அடைவதற்காக படும் கஷ்டங்கள் ஏராளம், அதை உணராமல் குழந்தைகள் கடத்தப்படுவதால் பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். மருத்துவமனை, பேருந்து நிலையம் போன்ற மக்கள் கூடும் பொது இடங்களில் தான் குழந்தைகள் கடத்தப்படுவதாக இதுவரை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இந்தப் படத்தில் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுத்துச் செல்லும் காட்சி புதுமையாக இருந்தாலும், கதையை த்ரிலிங்காகவும், காட்சிகளை யூகிக்க முடியாதவாறு கடைசி வரை கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
தனது பிரசவத்தின் போது தாய், தந்தை பக்கத்தில் இல்லையே என நாயகி ஏங்கும் போது குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும், அக்கா, தங்கை உறவை விட சொத்து தான் முக்கியம் என சண்டையிடும் சகோதரியின் மனநிலையையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.
நாயகி ஜோதியின் வயிற்றில் இருந்த குழந்தையை கிழித்து எடுத்துச் சென்றதை கண்டுபிடிப்பதற்காக, நாயகன் வெற்றி சந்தேகப்படும் ஒவ்வொருவரும், இவர்கள் தான் குழந்தையை அறுத்து எடுத்திருப்பார்களோ என்கிற எதிர்பார்ப்போடு கதை நகர்கிறது.
மருத்துவமனை நடத்தி வரும் தனது கணவர் செய்யும் தவறுகள், மனைவி “ஜோதிக்கு” தெரியவரும் போது எந்தவித பதட்டமும் அடையாமல், அவள் செய்யும் செயல் “ஒரு ஆணின் கோபத்தை விட பெண்ணின் அமைதி ஆபத்தானது” என்பதை அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும், அவரவர்களுக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளனர். படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.