பானுப்பிரியா மீது வழக்கு
தென்னிந்திய சினிமாவில் நூற்றுக்கணக்ககான படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பானுப்பிரியா. திருமணத்திற்கு பிறகு குணச்சித்திர நடிகையாக உருவெடுத்த பானுப்பிரியா சில படங்களில் அம்மா வேடங்களிலும் நடித்தார். கடைசியாக ‘சிவலிங்கா’, ‘மகளிர் மட்டும்‘ ஆகிய படங்களில் நடித்த அவர், தொலைக்காட்சி சீரியல்களில் நாயகியாகவும் நடித்து வந்தார்.
இந்தநிலையில், திரைப்பட நடிகை பானுப்பிரியாவின் வீட்டில் வேலைபார்க்கும் 14 வயது சிறுமியின் தாய் பிரபாவதி, பானுப்பிரியா மீது ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் “பொருளாதார ரீதியாக மிகவும் கீழ்நிலையில் இருக்கும் நான் என்னுடைய மகள் 14 வயது சந்தியாவை திரைப்பட நடிகை பானுப்பிரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தேன். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து என் மகளை அவர்கள் அழைத்து சென்றனர்.
ஆனால், கடந்த 18 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை. சமீபத்தில் வேறு ஒருவரின் மொபைல் போன் மூலம் என்னுடன் பேசிய என் மகள் சந்தியா, பானுப்பிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் என்பவர் தன்னை மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார். அடித்து துன்புறுத்துகின்றனர் என்று கூறினார்.
இதுபற்றி கேட்பதற்காக 18.1.2019 பானுப்பிரியா வீட்டிற்கு சென்றேன். ஆனால் அங்கிருந்தவர்கள் உன்னால் முடிந்ததை செய்துகொள். எங்களிடம் பணம் உள்ளது.
எங்களுக்கு செல்வாக்கும் உள்ளது. உன் மகள் மீது திருட்டுக் குற்றம் சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம் என்று கூறி என்னை கழுத்தைப் பிடித்து வெளியேற்றிவிட்டனர். எனவே, இந்த விஷயத்தில் போலீசார் தலையிட்டு நீதி கிடைக்க உதவ வேண்டும் என்று கூறியிருந்தார்.பிரபாவதியின் புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார் பானுப்ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் சிறுமியை மீட்டு குழந்தை நலக்குழும அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்தினர். தொடர்ந்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் 14 வயதில் வீட்டில் பணியில் அமர்த்தி கொடுமைப்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் பானுப்பிரியா மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நலக் குழுமம் விசாரணைக்கு பின் பரிந்துரை செய்திருந்தது. அதனடிப்படையில் தற்போது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகை பானுப்பிரியா மீது தொழிலாளர் நலத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனிடையே தன்னுடைய வீட்டில் திருட்டில் ஈடுபட்டதாக சிறுமி மற்றும் அவரது தாயார் மீது நடிகை பானுப்பிரியா வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சிறுமியும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டு, சிறுமி கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பானுப்பிரியா தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-
எங்கள் அம்மாவுக்கு தெரிந்த ஒருவர் தான் இந்த பெண்ணை கூட்டிக்கொண்டு வந்தார். வீட்டு வேலைகளை நன்றாக செய்தாள்.
அவள் அம்மா எங்கள் வீட்டுக்கு வந்து அடிக்கடி அந்த பெண்ணை பார்த்துவிட்டு செல்வார். அப்படி வரும்போது அம்மாவிடம் பணம்-நகையை கொடுத்து அனுப்பிவிட்டேன் என்று சொன்னாள். அவள் அம்மாவுக்கு போன் பண்ணினோம். ஐ பேட், வாட்ச், கேமரா என எங்கள் வீட்டில் எடுத்ததை திருப்பிக்கொண்டு வந்தார். ‘இதெல்லாம் தான் என் பொண்ணு கொண்டு வந்தா, பணமும், நகையும் கொடுக்கல’ என்று பொய் சொன்னார். அப்போது, ‘நாங்கள் போலீசில் புகார் கொடுக்கிறோம். அப்புறம் உங்க பெண்ணைக் கூட்டிட்டுப் போங்க’ என்று என் அண்ணன் அந்த பெண்ணின் தாயார் பிரபாவதியிடம் சொன்னார். ஆனால் ஆந்திரா போனதும் சமால்கோட்டா காவல் நிலையத்தில் எங்கள் மீது புகார் கொடுத்துவிட்டார்.
“தன் மகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாக” புகாரில் கூறியுள்ளார். அதற்கு பிறகுதான் நாங்கள் தி.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம்.
நாங்கள் இங்கே புகார் கொடுத்ததும், பிரபாவதி சென்னைக்கு வந்திருக்கிறார். விசாரித்து விட்டு பிரபாவதியை கைது செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு பானுப்பிரியா கூறி உள்ளார்.