கொடைக்கானல் துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரனுக்கு காத்திருக்கும் சவால்கள்…
தமிழகத்தின் சுற்றுலாத்தலங்களில் முக்கியமான இடமாக கருதப்படுவது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்காடல் மலைப்பிரதேசம்.
கொடைக்கானலில் கோடைகாலங்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை இங்கு வந்து சுற்றிப்பார்த்து ஓய்வெடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் தடைபட்டது. சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்க்கை நடத்திய பல குடும்பங்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப்பிரதேசங்களில் பல்வேறு மலைக்கிராமங்களுக்கு பல ஆண்டுகளாக நிரந்தரமாக அடிப்படைத் தேவைகள் எதுவும் இன்றும் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலையில் கொடைக்கானலுக்கு புதிதாக துணை ஆட்சியராக சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த ஏழ்மையான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த பகுதி மக்களின் தேவைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
புதிதாக பதவி ஏற்றிருக்கும் சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ்க்கு பல்வேறு சவால்களும் காத்திருக்கிறது. அதாவது கொடைக்கானல் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நீண்டகால கோரிக்கையான கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும். சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் விடுதிகளில் கோடைகாலங்களில் கட்டணக் கொள்ளையில் விடுதியின் நிர்வாகத்தினர் ஈடுபடுவதாக இருக்கும் அடைமொழியை மாற்றியமைக்க வேண்டும். உணவு விடுதிகளில் உணவுப் பொருட்களின் விலையை ஒரே விலையில் இருக்குமாறு ஒழுங்குபடுத்த வேண்டும்.
சுற்றுலா சீசன் காலங்களில், கொடைக்கானலில் ஏற்படும் வாகனப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளை ஏற்படுத்த வேண்டும். இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் சுற்றுலாவை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு மாற்று தொழில்கள் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விவசாயிகள் விளைவிக்கும் விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்யும் கொள்முதல் நிலையத்தை கொடைக்கானலில் அமைத்துத்தர வழிவகை செய்ய வேண்டும். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு விவசாயிகளே விலையை நிர்ணயம் செய்ய வழிவகை செய்தால் நன்றாக இருக்கும். கொடைக்கானல் மலைப்பகுதியில் புதிய சுற்றுலாத் தலங்கள் இணைக்கப்பட்டதை உறுதி செய்து அதற்கான புதிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இங்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று அந்த இடங்களைப் பற்றி விளக்கும் சுற்றுலா வழிகாட்டுவோர்களுக்கு முறையான பயிற்சி அளித்து முறைப்படுத்த வேண்டும்.
நீண்டகாலமாக அரசு நிலங்களில் வீடு கட்டி வசித்துவரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தப் பகுதி மக்களுக்கோ சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கோ வனவிலங்குகளால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையை மாற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு அருகில் கட்டப்பட்டுள்ள நட்சத்திர விடுதிகளை முறையான ஆவணங்களுடன் கட்டப்பட்டுள்ளதா என்று சோதனை செய்து ஒழுங்குபடுத்த வேண்டும்.
பேத்துப்பாறை பகுதிக்கு சிற்றுந்து வசதி செய்துதரவேண்டும். வெள்ளக்கவிக்கு சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்கிட வேண்டும். கொரோனா காரணமாக ஊரடங்கை சில தளர்வுகளுடன் அதாவது இபாஸ் வாங்கித்தான் கொடைக்கானலுக்கு வரவேண்டும் என்ற கட்டுப்பாடு நீடிக்கிறது. அதனை நீக்கி சுற்றுலாப் பயணிகளை கட்டுப்பாடுகள் இல்லாமல் கொடைக்கானலுக்குள் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே சுற்றுலா தொழிலை நம்பி வாழும் மக்களின் பொருளாதார நிலை உயரும். மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற காட்சி மற்றும் அச்சு ஊடக நிருபர்களை மட்டும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவும் செய்திகளை வெளியிடவும் அனுமதி வழங்க வேண்டும்.
புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு கடுமையான விதிமுறைகளை வகுக்க வேண்டும். வணிக நோக்கில் விவசாய நிலங்களை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தி விவசாயத்தை காக்க வேண்டும். விவசாயிகள் மற்றும் அனைத்து சுற்றுலா சார்ந்த வியாபாரிகளை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்க வழிவகை செய்ய வேண்டும். சிறுகுறு விவசாயிகள், வியாபாரிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் பெறுவதை ஊக்குவித்து தனியார் நிறுவனங்களில கடன் பெறுவதை தவிர்க்க அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனப்பகுதிகளில் அதிக அளவில் மரக்கன்றுகளை வளர்த்து வனவிலங்குகளுக்கு தண்ணீர் வசதிகளையும் செய்ய வேண்டும்.
இதுவரை எந்த அதிகாரிக்கும் இல்லாத சவாலான பணிகள் சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ்க்கு காத்திருக்கிறது. இவர் நமது மாநிலத்தைச் சேர்ந்தவர். கிராம மக்களின் தேவைகளையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் நன்கு அறிந்தவர் என்பதால் எங்களின் தேவைகள் அனைத்தையும் இவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். மாவட்ட துணை ஆட்சியராக பதவியேற்ற உடனேயே இவருடைய கோரிக்கைகளை நமது இதழ் மூலமாக வைத்து நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் கொடைக்கானல் மக்கள். அதே நம்பிக்கையுடன் நாமும் காத்திருப்போம்.
- ரபீக்