மாடலிங் துறையில் சாதித்து வரும் சாரிகா
வலிமை என்பது உடல்திறன் சார்ந்தது அல்ல. அசைக்க முடியாத நம்பிக்கை சார்ந்தது என்று சொல்வார்கள். இதற்கு சரியான உதாரணம் சென்னையைச் சேர்ந்த சாரிகா. இவர் பிறக்கும் போதே செவித்திறன் குறைபாட்டுடன் பிறந்ததால் பேச்சுத்திறனும் பாதிக்கப்பட்டது. இதனால் இவரது பெற்றோர்கள் பல்வேறு மருத்துவ ஆலோசனைகளுக்குப் பிறகு செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்த்தனர். அங்கு ஆசிரியையின் பயிற்சியினால் 6 வயதில் பேசத் தொடங்கினார்.
அதன்பிறகு தனது நிலையை நினைத்து வருத்தப்பட்டு நான்கு சுவர்களுக்குள் முடங்கிவிடாமல் நீச்சல், மாடலிங் பக்கம் தனது கவனத்தைச் செலுத்தி வலம் வரத் தொடங்கியுள்ளார். இவரது பெற்றோரும், ஆசிரியர்களும் இவரது திறமையைப் பார்த்து இவரை ஊக்குவித்ததோடு இவருக்கு துணை நின்றதால் இன்று மாடலிங் துறையில் முதல் செவித்திறன் பாதிக்கப்பட்ட பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராகியுள்ளார். பிறவியிலேயே செவித்திறன் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு முன்மாதிரியாகத் திகழும் சரிகா இன்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மிஸ் ஜூனியர் சென்னை 2022 பட்டத்தை வென்றுள்ளார். மேலும் தங்கமங்கை 2022 இளம் சாதனையாளர் பட்டத்தையும் வென்றுள்ளார்.
மேலும் யோகா, நீச்சல், ஓவியம் போன்ற துறைகளிலும் தனது கவனத்தை செலுத்தி வெற்றியும் கண்டுள்ளார். இவரது எதிர்கால கனவு குறித்து அவர் கூறுகையில், என்போன்ற பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் என்னால் முடிந்தவரை உதவிகளைச் செய்ய வேண்டும். எனக்காக எனது பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனக்கு ஏற்பட்ட நிலைமை இனி யாருக்கும் நடக்க கூடாது என நினைக்கிறேன். மேலும் மாடலிங் துறையிலும் சாதிக்க வேண்டும் என்கிறார்.
இவரது முயற்சிகள் வெற்றி பெற நமது சார்பிலும் வாழ்த்துக்கள்..
– கல்கி