வசனங்கள் இல்லாமல் உடல் மொழியிலேயே நடிப்பை வெளிப்படுத்திய நடிகை “கார்கி” ( சாய் பல்லவி )
திரையரங்குகளில் தற்போது மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “கார்கி” திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகை சாய் பல்லவி, நடிகர்கள் ஆர்.எஸ். சிவாஜி, சரவணன், காளி வெங்கட், இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் நடிகை சாய் பல்லவி பேசும்போது…. “கார்கி” படத்தின் பத்திரிகையாளர் காட்சியை பார்த்து விட்டு படத்தின் விமர்சனம் எழுதும் போது கதையை மட்டும் எழுதாமல் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் பணிகளையும் பாராட்டி எழுதிய அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த நடிகர் சூர்யாவுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் பேசுகையில் நான் திரையரங்கிற்கு சென்று மக்களோடு படம் பார்த்தேன். அவர்கள் பாராட்டுவதைவிட உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்கள். அதை பார்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.
நடிகர் காளி வெங்கட் பேசுகையில்… தத்துப் பிள்ளைக்கு தாய்பால் கொடுப்பது போல் பத்திரிகையாளர்கள் இப்படத்திற்கு விமர்சனம் எழுதி இருந்தார்கள். பெரிய படங்களுக்கு மட்டுமே இடைவேளையின் போதே விமர்சனம் ஆரம்பிக்கும். அந்த வரிசையில் “கார்கி” படம் இருப்பதில் மகிழ்ச்சி. கதாபாத்திரத்தை உள்வாங்கியதால் வசனங்கள் இல்லாமல் உடல் மொழியிலேயே சாய் பல்லவி தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். குறுகிய காலத்தில் இப்படம் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது. “கார்கி” எனக்கு முக்கியமான படமாக அமைந்திருக்கிறது என்றார்.
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி பேசுகையில்… இப்படத்தின் இரண்டாம் நாள் படைப்பின் போது கதை தெரியாமலேயே கிளைமேக்ஸ் காட்சியில் நடிக்க அழைத்த போது தயங்கினேன். இயக்குனர் எனக்கு சொல்லிக் கொடுத்ததால் அந்த காட்சி சிறப்பாக வந்துள்ளது. சாய் பல்லவியிடன் அவருக்கு அப்பாவாக நடித்தது மகிழ்சியாக இருந்தது என்றார்.
திருநங்கை சுதா பேசுகையில்…. இந்த கதாபாத்திரத்திற்கு என்னை ஏன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று யோசித்தேன். படத்தை பார்த்ததும் எனது தோழிகள் பாராட்டினார்கள்.
என்னுடன் நெருங்கிய உறவினர்கள் மட்டும் தான் பேசுவார்கள். ஆனால், இப்படம் வெளியான பிறகு கேரளாவில் இருக்கும் எனது தூரத்து உறவினர்களும் என்னைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். படப்பிடிப்பின் போது காளி வெங்கட் அனைவரும் சாப்பிட்ட பின்னர் தான் அவர் சாப்பிடுவார். அவரைப் போல் சிறந்த மனிதரை பார்க்க முடியுமா என தெரியவில்லை என்று பேசினார்.
மேலும் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன், தயாரிப்பாளர் சக்திவேல், மெர்ச்சி செந்தில் உள்ளிட்டோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு, படத்தின் வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இப்படம் பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.