தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆட்டம் போட்ட விஷால்!: பூட்டு போட்ட தயாரிப்பாளர்கள்…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக நடிகர் விஷால் பதவி வகித்து வருகிறார். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு குழுவினர் சங்க வளாகத்தில் விஷாலின் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக நமக்கு கிடைத்த தகவலையடுத்து எதிரணி தயாரிப்பாளர்கள் வருவதற்கு முன்னதாகவே நமது செய்தியாளர்கள் அங்கு காத்திருந்தனர். இதனால் காவல்துறையினரும் ஏராளமானோர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
சிறிது நேரத்தில் பிரபல தயாரிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நடிகர் ஜெ.கே.ரிதீஷ் தலைமையில், தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், டி.சிவா, கே.ராஜன், எஸ்.வி.சேகர், ஏ.எல்.அழகப்பன், சுரேஷ் காமாட்சி, கிஷோர் உள்பட சுமார் 70க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், தியாகராயநகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தின் முன்னால் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்கள் சங்கத்திற்கு வந்தபோது, விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் அங்கு இல்லை. சங்கத்தின் மேனேஜர் அனைத்து நிர்வாகிகளுக்கும் போனில் தொடர்பு கொண்டு சங்கத்தில் நடக்கும் விஷயங்களை தெளிவாக விளக்கிக் கூறியும் பேச்சுவார்த்தை நடத்த யாரும் முன்வரவில்லை. நீண்ட நேர காத்திருப்பிற்குப் பிறகு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் கதிரேசன் சங்கத்திற்கு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ரித்தீஸ் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில் சொல்ல முடியாமல் திணறிய செயலாளர் கதிரேசனுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியில் நிர்வாகத்திற்கு எதிராக ஒன்று திரண்ட தயாரிப்பாளர்களின் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல முடியாததால் ‘வேண்டுமானால் சங்கத்தை பூட்டுங்கள். விஷால் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் வந்தவுடன் பேசி தீர்த்துக் கொள்ளலாம்’ என்று கதிரேசன் கூற உடனே போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஊழியர்களை வெளியே அனுப்பிவிட்டு சங்கத்திற்கு பூட்டு போட்டனர். பிறகு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்து விட்டு சாவியை ஒப்படைத்தனர். ஆனால் பதிவாளர் சாவியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.
காலையில் டிஆர்ஓ வை அலுவலகத்திற்கு அனுப்பி சங்கத்தின் கணக்கு வழக்குகள் அடங்கிய முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சங்கத்திற்கு சீல் வைத்தனர். அதன் பிறகு விஷால் சங்கத்தின் முன்பாக காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சங்கத்தின் உறுப்பினர்கள் யாரும் அவருடன் இல்லை. அவரது ரசிகர் மன்றத்தினரும் காசு தருவதாக அழைத்ததின் பேரில் அங்கு வந்து இருந்ததாகவே பிறகு தெரியவந்தது.
விஷாலின் வரம்பு மீறிய பேச்சால் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பொது இடத்தில் அனுமதியின்றி கூடுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் போன்ற சட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்று மாலை விஷால் விடுவிக்கப்பட்டார். அன்றைய தினம் ரித்தீஷ் தலைமையிலான எதிரணி தயாரிப்பாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரை சந்தித்து விஷாலின் முறைகேடான நிர்வாகத்தை மாற்றி அடுத்த தேர்தல் நடக்கும் வரை அரசே சங்கத்தை நிர்வகிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதன்பிறகு விஷால் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றமும் விஷாலின் நிர்வாகத்திற்கு எதிராகவே தீர்ப்பு வழங்கியது. அதாவது சங்கத்தின் கணக்கு வழக்குகள் அடங்கிய முக்கிய ஆவணங்களை எடுத்து அங்குள்ள ஒரு அறையில் அந்த ஆவணங்களை வைக்க வேண்டும். அந்த அறையை பூட்டுப் போட்டு பூட்டி சாவியை அரசு அதிகாரி வைத்துக்கொள்ள வேண்டும் என்று விஷாலுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதால் சங்கத்தின் நிர்வாகிகள் கலக்கத்திலும், குற்றம்சாட்டி போராடிய ரித்தீஷ் தலைமையிலான எதிரணியினர் உற்சாகத்திலும் உள்ளனர்.
இது சம்பந்தமாக சினிமா பிரபலங்கள் சிலரிடம் நாம் விசாரிக்கையில், விஷால் தலைக்கனத்தில் வரம்பு மீறி ஆட்டம் போட்டார். (தன்னை எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களை சங்கத்தின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அவர்களை மிரட்டினார்.) தமிழ் சினிமா தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற மமதையில் ஆடினார். ஆனால் தக்க சமயத்தில் ரித்தீஷ், விஷாலின் ஆட்டத்தை அடக்கியிருக்கிறார். இதோட விஷால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒதுங்கினால் அவருக்கு நல்லது” என்று கூறினார்கள் .
ஒதுங்குவாரா விஷால்? காத்திருப்போம் என்ன நடக்கிறது என்பதை காண…
– நமது நிருபர்