தமிழகம்

மத நல்லிணக்கமும் திராவிடமும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கோவில் விழாவில் தேர்வடம் பிடித்ததற்கு அப்பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாற்று சமூகத்தினர் தேர்வடம் இழுக்கக்கூடாது என்ற எந்த ஆகமவிதியிலும் கூறப்படவில்லை. ஓடாத திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரை ஓட வைத்தது திமுக ஆட்சியில் தான். தூர்வாரப்படாமல் இருந்த மயிலை கபாலீஸ்வரர் கோயில் குளம் தூர்வாரப்பட்டதும் திமுக ஆட்சியில் தான்.

மத நல்லிணக்கம் தான் திமுகவின் அடிநாதம் அனைத்து சமுதாயத்தினரையும் சமமாக நடத்துவதுதான் திமுகவின் வரலாறு. மதநல்லிணக்கம் குறித்து மத அடிப்படைவாதிகளுக்கு சில கருத்துக்களை ஞாபகப்படுத்துகிறார் மூத்த பத்திரிகையாளர்.

நாகூர் தர்காவிற்கு வருகிறவர்களில் இந்துக்களே அதிகம். மதுரை காசி முதுல்லாவில் உள்ள பள்ளிவாசலை கட்டித் தந்தது மன்னர் சுந்தரபாண்டியன், இராணி மங்கம்மாள். திருச்சியிலிருந்து ஆண்ட மீனாட்சி ஆகியோர் பள்ளிவாசல்களை பராமரிக்க மானியம் அளித்துள்ளனர். மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசலுக்கு 14 ஆயிரம் பொற்காசுகள் அளித்துள்ளார் மன்னர் கூன்பாண்டியன்.

இதேபோல் முஸ்லீம் மன்னர்கள் பல கோயில்களுக்கு மானியம் தந்துள்ளனர். இந்து மத வெறுப்பாளர் என தவறாக சித்தரிக்கப்படுகிற ஔரங்கசீப், ஐதாம்பலி ஷிவ் ஷங்கர் மந்திர், உஜ்ஜயினி மகா காலேசுவரர் கோயில், உத்தரங்சே ஜெயின் கோயில், கவுகாத்தி அம்ப்ராந்த் கோயில், காசி ஆலயம் ஆகியவற்றுக்கு மானியம் வழங்கியுள்ளனர். டில்லியில் இஸ்லாமிய ஆட்சி நடைபெற்ற போது அரசு நாணயங்களில் இராமர், சீதை, லட்சுமி ஆகியோர் உருவங்கள் பொறிக்கப்பட்டன. அக்பரின் அரசவைக் கவிஞராக இருந்த ஷைருபைசி மகாபாரதத்தை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.

தாஜ்மகாலைக் கட்டிய ஷாஜகானின் மூத்த மகன் தாராஜிகோ வேதங்களையும், உபநிடதங்களையும் பாரசீக மொழியில் ஆக்கினார். இவருடைய நூல்களை வைத்தே ஐரோப்பியர்கள் இந்துமதம் குறித்து அறிந்து கொண்டனர். அமீர்குஸ்ரு என்ற பாரசீக கவிஞர் இந்து பூமி என் ஜென்ம பூமி, என் புகழிடம் என் அருமைத் தாய்நாடு என்று பெரும் உவகையோடு பாடினார்.

சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு குளம் கட்ட இடம் கொடுத்தவர் ஆற்காடு நவாப். கிபி 1688 ஆம் ஆண்டு காஞ்சி வரதராஜப்பெருமாள் மற்றும் தாயார் திருமேனிகள் திருச்சி மாவட்டம் உடையார் பாளையம் காட்டில் கொண்டுபோய் வைக்கப்பட்டிருந்தன. கோயில் பொறுப்பாளாகள் கேட்டும் கூட உடையார்பாளையம் ஜமீன்தார் அவற்றை கொடுக்க மறுத்தார். ஆத்தான் திருவேங்கட ராமானுஜ ஜீயர் கர்நாடக நவாப் சாததுல்லாகானை தெய்வத் திருமேனிகளை மீட்டுத் தருமாறு வேண்டினார். நவாப் ஆணைப்படி அவருடைய தளபதி தோடாமால் படையோடு சென்று திருமேனிகளை மீட்டு காஞ்சிபுரம் கோயிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்ய உதவினார்.

திருப்பதி வெங்கடேஸ்வரருக்கு ஹைதர்அலி எட்டுகிலோ தங்க காசு மாலை அளித்தார். அது இன்றும் அலங்காரத்தில் பயன்படுத்தப்படுகிறது. கிழக்கிந்திய கம்பெனி படையெடுப்பால் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் கோயில்கள் சேதமடைந்து பூஜைகள் இல்லாதிருந்த நிலையில் கர்நாடக நவாப் அமீகாத் சாயுபு பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்தார். சிதம்பரத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் இராமர் பல ஊர்களுக்குச் சென்று தில்லையில் கடலாடி வரும் உற்சவத்தை நடத்துவோர் முஸ்லீம்கள்.

வடஆற்காடு சோழிங்கர் அருள்மிகு பக்தவச்சலச்சாமி கோயிலில் ஆண்டாள் திருமேனி இல்லாதிருப்பதை அறிந்து 1715 ஆம் ஆண்டு அதை உருவாக்கி பிரதிஷ்டை செய்ய உதவியவர் முகலாய மன்னர் பரூக் சீயர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சையது இஸ்மாயில் என்பவர் நிர்வாகியாக இருந்திருக்கிறார். திருவல்லிக்கேணியில் திருவேட்டீஸ்வரன் பேட்டையிலிருக்கும் திருவேட்டகம் பாடல் பெற்ற தலம். இந்த கோயிலுக்கு ஆற்காடு நவாப் மானியம் அளித்திருக்கிறார். இன்றுவரை அதிலிருந்து அர்த்த ஜாம பூஜைக்கு வேண்டிய பால், பழம், பூ ஆகியவை ஒரு முஸ்லீம் வீட்டிலிருந்து அனுப்பப்படுகிறது.

தஞ்சை கீழவாசல் சிவபெருமான் பூ மாலை அணிந்து, இஸ்லாமிய தோற்றத்தில் காட்சி தருகிறார். இந்த கோயில் பூமாலை ராவுத்தர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. தஞ்சை மாதாகோட்டையிலுள்ள துலுக்கன்பட்டி இனாத்துக்கான் என்ற அரசரால் இப்போது அந்த ஊரில் வாழும் இனத்தவர்களுக்காக கொடுக்கப்பட்டது. இன்றும் அந்த ஊரைச் சார்ந்தவர்கள் நன்றியோடு சியாமளாதேவி அம்மன் திருவிழாவின் போது மாவிளக்கு, தீச்சட்டி, பழம் ஆகிய பூஜைப் பொருட்களோடு முதலில் அந்த ஊரில் இருக்கும் இனாத்துக்கான் ஒலி தர்காவிற்குச் சென்று வழிப்பட்ட பிறகே கோயிலுக்குச் செல்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன் முஸ்லீம் ஒருவர் அளித்த பெரிய தங்க பதக்கமும் அலங்காரத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அண்மையில் கூட ஹைதராபத்தைச் சேர்ந்த மீரான்சாகிப் என்பவர் ஒன்றரைக்கிலோ எடையுள்ள 108 தங்கமலர்களை அளித்தார். வாரமுறை செவ்வாய் அன்று செய்யப்படும் அஷ்டதல பாத சேவையில் தெய்வத்தின் பாதத்தில் அர்சிக்கப்படுகின்றன. இதே மீரான்சாகிப் திருச்சானூர் பத்மாவதி தேவிக்கு தங்கக்கோப்பை ஒன்றையும் அளித்திருக்கிறார்.

திருவரங்கம் ரங்கநாதரை துலுக்க நாச்சியாரோடு தொடர்பு படுத்தி ஓர் உற்சவம் நடக்கிறது. அன்று அவருக்கு லுங்கி உடுத்தி, நெய்வேத்தியமாக ரொட்டியும் பாலும் படைக்கப்படுகிறது. மதுரையில் சிவபெருமான் குதிரை விற்க வந்த உற்சவம் நடக்கும்போது, அவருடைய உருவச் சிலைக்கு இஸ்லாமியர் அணியும் உடை உடுத்தப்படுகிறது. நாகர் கோயில் கிடலாக்குடி முஸ்லீம்கள் சுசீந்திரம் கோயில் விழாவில் பங்கேற்கிறார்கள். கோவை குறிச்சி செல்லப்பாண்டியம்மன் கோயிலுக்கும், சேலம் மின்னக்கால் கோபால கிருஷ்ணன் கோயிலுக்கும் திப்பு சுல்தான் கொடையளித்துள்ளார்.

18ஆம் நூற்றாண்டில் குற்றால நாதருக்கும், நெல்லை காந்திமதி அம்மனுக்கும் திருவிழா கொண்டாட முஸ்லீம்கள் பணம் திரட்டி தந்துள்ளனர். அமர்நாத் குகையில் பனிலிங்கம் இருப்பதைக் கண்டுபிடித்தவன் பூட்டாமாலிக் என்ற ஆடு மேய்க்கும் சிறுவன். இன்றைக்கும் பக்தர்கள் இறைவனுக்கு அளிக்கும் காணிக்கையின் ஒரு பகுதி பூட்டாமாலிக் குடும்பத்தினருக்கு அளிக்கப்படுகிறது.

இணைந்து வாழ்ந்தாக வேண்டிய இரு சமூகத்தினரிடையே மண்டை ஓடுகளால் மதில்களை எழுப்புகின்ற கொற்றர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய உறவுப்பாலங்கள் இவை.

ஒருமுறை ஒருவர் பாபா ஃபரீத் என்ற ஞானிக்கு கத்திரிக்கோலை பரிசளித்தார். அவரிடம் பாபா ஃபரீத் இதற்கு பதிலாக ஊசியைக் கொடுங்கள். ஏனென்றால் நான் இணைக்க வந்தவன். பிரிக்க வந்தவன் அல்ல என்றார். இன்றைக்கும் இரு சமூகத்தினரை வழிநடத்த பாபா ஃபரீத்துகள் தேவைப்படுகின்றனர். நெல்லிக்குப்பம் இராமலிங்க அடிகளார் சத்திய ஞான சபையில் நாள் தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாதத்தில் ஒரு நாள் இந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமிய வணிகர் ஒருவர் அன்னதானம் வழங்குகிறார்.

இவ்வாறு இணக்கமாக வாழும் இரு சமூக மக்களிடையே பிணக்கை ஏற்படுத்தி, பதற்றத்தை உருவாக்கும் தீயசக்திகளை ஒன்றிணைந்து முறியடிப்பது அனைவரது கடமையாகும்.

வே.கா.இளங்கோ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button