மீண்டும் அதிமுக உடைகிறதா? : இபிஎஸ் – ஓபிஎஸ் மோதல் விவகாரம்…
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தை கிளப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர் பழனிச்சாமி அணியினர். இதனால் நடைபெற இருந்த பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரி நீதிமன்றத்தை நாடினர் பன்னீர் செல்வம் அணியினர். அப்போது நான் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், நான் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது என்று தனது அதிகாரத்தை விளக்கி பன்னீர் நீதிமன்றத்தில் தனது வாதத்தை எடுத்துரைத்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் ஆதரவு எனக்குத்தான் உள்ளது. பொதுக்குழுவுக்குத் தான் தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என பழனிச்சாமி தரப்பினர் வாதாடினர்.
இதெல்லாம் நடக்கும் என்பதை பழனிச்சாமி தரப்பினர் ஏற்கனவே கணித்துள்ளனர். அதாவது பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவெற்றி பொதுச்செயலாளராக உட்கார்ந்தபிறகு பன்னீர் நீதிமன்றம் செல்வார். அந்த வழக்கு பல ஆண்டுகள் நடைபெறும் பார்த்துக் கொள்ளலாம் என்று கூடிப்பேசி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பாகவே பன்னீர் நீதிமன்றம் சென்று விட்டார்.
நீதிமன்றத்தில் பொதுக்குழுவை நடத்தலாம். விதிகளை திருத்திக் கொள்ளலாம் என தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பு பழனிச்சாமிக்கு சாதகமாகவும் பன்னீருக்கு பாதகமாகவும் அமைந்தது. பழனிச்சாமி தரப்பினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மறுநாள் பதவி ஏற்க இருக்கும் பழனிச்சாமிக்கு ஆளுயர மாலை, கிரீடம், செங்கோல் என தடபுடலான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். சில முன்னாள் அமைச்சர்கள் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மதிமயங்கி தூங்கிவிட்டனர். அதன்பிறகுதான் பன்னீர் தரப்பினர் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இதை பழனிச்சாமி தரப்பினர் எதிர்பார்க்க வில்லை.
அதாவது பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம். தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் கட்சியின் விதிகளை திருத்திக் கொள்ளலாம் என்று அடிப்படை விதிகளை மாற்றிக் கொள்ள தனி நீதிபதி கூறியது அனுமதி அளித்தது ஒருதலை பட்சமானது. எனவே மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என தலைமை நீதிபதியிடம் முறையிட்டு விசாரணைக்கு அனுமதி வாங்கியுள்ளனர் பன்னீர் தரப்பினர். இதை பழனிச்சாமி தரப்பினர் எதிர்பார்க்கவில்லை.
தனிப்பட்ட கட்சியின் பொதுக்குழு விவகாரங்களில் நீதிமன்றம் எவ்வாறு தலையிடலாம் என புரியாத சிலர் விமர்சித்து வருகிறார்கள். தனிப்பட்ட இயக்கத்திற்கு நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ விதிகளை வகுக்கவில்லை. அதிமுக என்கிற கட்சி உருவாக்கப்பட்ட போது தனக்கான சட்டதிட்ட விதிமுறைகளை அந்த கட்சிதான் தீர்மானித்துள்ளது. அந்த சட்டதிட்டங்களை தேர்தல் ஆணையத்தில் வழங்கி கட்சியை பதிவு செய்துள்ளார்கள். அதன்படிதான் தேர்தல் ஆணையமோ, நீதிமன்றமோ அந்த கட்சி வழங்கிய சட்டதிட்டங்கள் விதிப்படி யாரேனும் பாதிக்கப்பட்டாலோ, விதிகளை மீறி செயல்பட்டாலோ நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தலையிட்டு பிரச்சனையை முடித்து வைப்பார்கள்.
இதனால் தான் நீதிமன்றம் ஏற்கனவே இருக்கும் நிலையே தொடரட்டும். ஏற்கனவே முடிவு செய்த 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றி கொள்ளுங்கள். புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது. வேண்டுமானால் விவாதித்துக் கொள்ளலாம் என்று அதிகாலையில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை கேட்ட பழனிச்சாமி தரப்பு பதட்டத்தில் அவசர அவசரமாக 23 தீர்மானங்களையும் நிராகரிக்கலாம் என முடிவு செய்கிறார்கள். ஆனால் பன்னீர் செல்வம் தரப்பினரோ மிகவும் நிதானமாக தனக்கு எதிராக பொதுக்குழுவில் என்னவெல்லாம் நடக்கும் என தெரிந்தே கலந்து கொள்கிறார்கள். ஆனால் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பார்கள் என்பதை பன்னீர் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை.
தீர்மானங்களை நிராகரித்து சட்டசிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர் பழனிச்சாமி தரப்பினர். சட்ட ஆலோசகர்களை ஆலோசிக்காமல் சில நிதானமற்ற நபர்களின் பேச்சை கேட்டு தவறான முடிவை எடுத்துவிட்டார் பழனிச்சாமி என்கின்றனர் சட்ட நுணுக்கங்களை அறிந்தவர்கள். ஒரு பொதுக்குழு எப்படி நடைபெற வேண்டும் என விதிமுறைகள் இருந்தும் அதையாரும் கடைபிடிக்க வில்லை. பொதுக்குழு உறுப்பினர்களிடம் எந்த ஒரு தீர்மானத்தையும் முன்வைக்காமல் 23 தீர்மானங்களையம் நிராகரித்ததாக கூறுவது சட்டப்படி தவறான செயல். செயற்குழுவில் தீர்மானங்களை வைத்து ஒப்பதல் பெற்று பொதுக்குழுவில் தீர்மானங்களை விவாதித்து ஒப்புதல் பெறுவது ஜெ. காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து எந்த தீர்மானத்தையும் உறுப்பினர்கள் மத்தியில் வாசிக்காமல் விதிகளை மீறி இரண்டு பேர் நிராகரிக்கிறோம் என்று கத்தினால் அனைத்து தீர்மானங்களும் நிராகரித்ததாக ஆகிவிடுமா என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
நீதிமன்றத்தில் 23 தீர்மானங்களையும் நிறைவேற்றுவதாக ஒத்துக்கொண்ட பழனிச்சாமி தரப்பு பொதுக்குழுவில் நிராகரித்து நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக பன்னீர்செல்வம் தரப்பினர் கூறுகிறார்கள். இந்த வழக்கு மேல்முறையீட்டிற்கு செல்லும்போது ஏற்கனவே நிறைவேற்றுவதாக கூறிய தீர்மானங்களை ஏன் நிராகரித்தீர்கள் என்கிற கேள்வியை எழுப்புவார்கள்.
பன்னீர் செல்வத்தைப் பொறுத்தவரை கட்சியை கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் எதுவும் இல்லை. என்னை சேர்த்துக்கோ இல்லாவிட்டால் கட்சியும் சின்னமும் பழனிச்சாமிக்கு விட மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் பழனிச்சாமியை பொறுத்தவரை பன்னீரை வெளியேற்றி கட்சியையும் சின்னத்தையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஒருங்கிணைப்பாளர் பதவியை பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவைத்தலைவர் பொதுக்குழுவை கூட்ட முடியாது. பழனிச்சாமி சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்தே ஆக வேண்டும் என்கிறார்கள் பன்னீர் தரப்பினர்.
எது எப்படியோ பழனிச்சாமி, பன்னீர் செல்வம் இரண்டு பேரின் சுயநலத்துக்காக அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக பிளவுபட்டு, தொண்டர்கள் சோர்வடைந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல அழிவுப் பாதையில் செல்கிறது. அது தமிழகத்திற்கு நல்லதல்ல என உண்மையான எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் புலம்புகிறார்கள்.
– குண்டூசி