உலகை ஆளப்போகும் தமிழ் பாரம்பரிய சிலம்ப விளையாட்டு
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்ப விளையாட்டிற்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதால் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்ப விளையாட்டு வளர்ச்சிக்காக கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் 42 ஆண்டுகளாக திறம்பட பாடுபட்டு தற்போது சிலம்ப விளையாட்டை தஞ்சை பல்கலை கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்திய சிலம்பாட்ட சம்மேளனத்தின் தலைவர் முனைவர் எம்.ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். தலைமையில் தேனி மாவட்டம் போடிமெட்டில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் மாநில நடுவர்களுக்கான பயிற்சி முகாமும், பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது.
சிலம்ப விளையாட்டை சிறப்பான முறையில் முன்னெடுத்துச்செலவும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்ப விளையாட்டை மேம்படுத்த இந்த முகாமில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இராணுவ முகாமில் பயிற்சி அளிப்பது போன்று மூத்த பயிற்சியாளர்களை கொண்டு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. காலை 7.00 மணிக்கு துவங்கிய பயிற்சி முகாம் இரவு 8.00 மணிவரை நடைபெற்றது. இம்முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து சிலம்ப பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர். பயிற்சியின்போது சிலம்ப விளையாட்டின் பாரம்பரியம், விளையாட்டு நுணக்கங்கள், நடுவர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்து வகுப்புக்கள் எடுக்கப்பட்டன.
மேலும் செய்முறை மற்றும் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு கடும் கட்டுப்பாடுகளோடு தேர்ச்சி பெற்ற மாநில நடுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் இரண்டாம் நாள் நடைபெற்ற தமிழக சிலம்பாட்ட கழகத்தில் தேர்தலில் கேப்டன் பிரதீப் ராஜேந்திரன் புதிய தலைவராகவும் கே.ஜி. முரளி கிருஷ்ணன் பொதுச்செயலாளராகவும், கே.ரவிச்சந்திரன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் சிலம்ப விளையாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் போது தமிழ் மொழியே உச்சரிப்பு மொழியாக இருக்க வேண்டும் என முகாமில் கலந்துகொண்ட நடுவர்களின் கோரிக்கையாக ஒலித்தது.
– நமது நிருபர்