தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்தவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் 266 மையங்களில் தடுப்பூசி ஒத்திகை பார்க்கப்பட்ட நிலையில், 166 மையங்களில் 4 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. முதல் தடுப்பூசி மருத்துவர் சங்க மாநிலத் தலைவர் செந்திலுக்கு போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராஜாஜி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜனும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கொரோனா தடுப்பூசியை நிச்சயமாக போட்டுக் கொள்வேன் என கூறினார். இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட முன் களப்பணியாளர்களுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்றும், இது நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டிய மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி என்றும் தெரிவித்தார்.
சென்னையை பொறுத்தவரை 12 மையங்கள் மூலமும் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 166 மையங்கள் மூலமாக இந்த தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், முதல் நாளில் 10 பிரபல மருத்துவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக் கொண்டு அவர்களுக்கு எந்தவித பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்பது அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளதாகவும், மக்கள் அனைவரும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள முன்வர வேண்டுமென்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.
இதுவரை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள 6 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். தடுப்பூசி போட்டுக்கொள்ள தானும், சுகாதாரத்துறை செயலாளரும் பதிவு செய்திருப்பதாகவும், இதுவரை இந்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு காய்ச்சல் இருமல் போன்ற எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படவில்லை என்றும், ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும், இந்திய பிரதமருக்கும் தமிழக சுகாதாரத் துறை தரப்பில் வாழ்த்துக்களையும் அமைச்சர் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அண்ணல் காந்தி அரசு தலைமை மருத்துவமனை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, இனாம்குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை, மணப்பாறை அரசு மருத்துவமனை, லால்குடி அரசு மருத்துவமனை என 5 இடங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள் என ஒரு மருத்துவமனையில் 100 தடுப்பூசி என 5 மருத்துவமனைகளிலும் 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிந்திருந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் 91 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 2வது நாள் தடுப்பூசி போடப்படும் பணியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை ஊழியர் என்ற முறையில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவித்தார். கொரோனா இரண்டாம் அலையை தடுக்க தடுப்பூசி மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸை தடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஆனால் இம்மருந்தின் செயல்பாடு குறித்த 3ம் கட்ட பரிசோதனை இன்னும் முழுமை பெறவில்லை. இதனால் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் இம்மருந்து பரிசோதனையில் இருப்பதை தாங்கள் அறிந்தே செலுத்திக் கொள்வதாக ஒப்புதல் ஏற்பு கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில், கோவிட் தடுப்பு மருந்தான கோவாக்சின், அவசர கால அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது என்றும், கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை இந்த தடுப்பு மருந்து உருவாக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தடுப்பு மருந்து 3ம் கட்ட பரிசோதனையில் இருப்பதாகவும், இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்பவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அவசியமில்லை என கருதக்கூடாது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் தயார் நிலையில் இருப்பதாகவும், ஒருவேளை பாதகமான நிலை உருவானால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான ஒப்புதல் ஏற்பு கடிதத்தில் கையெழுத்திடாதவர்களுக்கு, அந்த தடுப்பூசி போடப்படாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி தொடர்பாக மக்களுக்கு அச்சம் தேவையில்லை என அந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்ட மருத்துவர்கள் கூறியுள்ளனர். இரண்டு தடுப்பூசியும் பாதுகாப்பானவை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, டெல்லி ஸிவிலி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி தேவையில்லை என தெரிவித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், சோதனை முழுமை பெறாத கோவாக்சின் தடுப்பூசியை போட வேண்டாம் என்றும், கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். எனினும் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஏ.கே.சிங் ராணா, கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
– நமது நிருபர்